சிரியா முன்னாள் அதிபர் ஆசாத் உருவம் பதித்த கரன்சிகள் மாற்றம்

டமாஸ்கஸ்: சிரியாவில் நடந்த அரசியல் மாற்றங்களின் தொடர்ச்சியாக, முன்னாள் அதிபர் பஷாத் அல் ஆசாத் உருவம் பதித்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய நோட்டுகளை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில், 2000ல் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவரது தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இருவரும் சர்வாதிகார ஆட்சி நடத்தினர்.

கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன. 14 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், 2024ல் இந்த கிளர்ச்சிப்படைகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உட்பட, பெரும்பாலான நகரங்களை கைப்பற்றின.

இதையடுத்து, ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடினார். இடைக்கால அரசின் அதிபராக அகமது அல்-ஷரா பதவியேற்றார். அவர் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, சிரியா ரிசர்வ் வங்கி, ஆசாத் மற்றும் அவரது தந்தையின் படங்கள் இடம்பெற்றிருந்த கரன்சி நோட்டுகளை நீக்கி, புதிய கரன்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

'சிரியன் பவுன்ட்' எனப்படும் இந்த கரன்சி நோட்டுகளில், ஆசாத் படங்களுக்கு பதிலாக, அந்நாட்டின் தேசிய சின்னமான ரோஜா மலர் மற்றும் பாரம்பரிய விவசாயத்தை குறிக்கும் கோதுமை, ஆலிவ், ஆரஞ்சு, மல்பெரி போன்ற இயற்கை சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கரன்சி நோட்டுகள், ஜன., 1 முதல் அமலுக்கு வந்தன. 'பழைய கரன்சிகள் 90 நாட்களுக்கு பின் புழக்கத்தில் இருக்காது; அதற்குள் மாற்றிக் கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement