மக்களின் நண்பன் என்பதை நிரூபியுங்கள்: போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

28

சென்னை: ''போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது வெறும் வார்த்தையாக இல்லாமல், உண்மை என்று நிரூபிக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை கோட்டூர்புரத்தில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற உங்களது கனவும், முயற்சியும், உழைப்பும் சேர்ந்து தான் உங்களை பணியில் சேர வைத்துள்ளது. இனிமேல்தான் உங்களுக்கு பொறுப்பும், சமூக கடமையும் அதிகமாக இருப்பதை அனைவரும் உணர வேண்டும். போலீஸ் இருக்காங்க; அவங்க நம்மை பார்த்துக்குவாங்க என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாழ்கிறார்கள்.

அமைதிப் பூங்கா



இரவு நேரங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக வேலைக்கு சென்று வருகிறார்கள். தமிழகம் பாதுகாப்பான மாநிலம்; அமைதிப் பூங்கா என இந்தியா முழுவதும் எல்லோரும் சொல்கிறார்கள்.

இந்தியாவிலேயே முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதால், உலகளாவிய பெரும் நிறுவனங்கள் தமிழகத்தை நாடி வருகின்றன. அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் போலீஸ் துறையில் பணியாற்றுவர்களின் கைகளின் தான் உள்ளது என்ற பொறுப்புணர்வு , உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

ரியாலிட்டி



போலீஸ் பணி மனித நேயத்துடன் இணைந்தது. வீரத்தின் அடித்தளம் ஏது தெரியுமா? அன்பு தான். இன்னொரு பக்கம் எங்கேயோ ஒரு போலீஸ் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கும். அதனை உணர்ந்து நீங்கள் ஒவ்வொரு வரும் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.


போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது வெறும் வார்த்தையாக இல்லாமல், வெறும் வாசகங்களாக இல்லாமல், உண்மையில் அதனை நிரூபிக்க வேண்டும். போலீசார் அனைவரும் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உறுதி செய்கிற வேலையில் தெரிய வேண்டும்.

ஜாக்கிரதை



இரும்பு கரத்தை குற்றங்களை தடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறையை காண்பிக்க வேண்டும். இந்த குணங்களை காட்டுங்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போது, மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

100% உத்தரவு



இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வராக, இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, 100 சதவீதம் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய உத்தரவு. அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டம், அதன் விற்பனையை தடுப்பதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் எல்லோரு வீட்டிலும் குழந்தை இருப்பார்கள்.


யார் பாதிக்கப்பட்டாலும் போதையின் ஆபத்து நம்ம வீட்டு குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். நான் இன்சார்ஜ் ஆக இருக்க கூடிய பகுதியில், என்னை மீறி ஒரு குற்றச்சம்பவங்களையும் நடக்க விட மாட்டேன் என்று நீங்கள் ஒவ்வொரும் தீர்மானம் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement