வெனிசுலா மீதான அமெரிக்கப்படை தாக்குதலுக்கு ரஷ்யா, ஈரான் கண்டனம்

16

நியூயார்க்: வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு காரணமான, அதிபர் மதுரோ உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸ், மிரண்டா, அராகுவா உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்த தங்கள் படையினர், அவரை நாட்டை விட்டு வெளியேற்றியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மதுரோ வெளியேற்றப்பட்ட நிலையிலும், வெனிசுலா மீதான தாக்குதலை அமெரிக்க ராணுவம் நிறுத்தவில்லை.

ராணுவ நிலைகள் மீது தொடர்ந்து அமெரிக்க விமானப்படை குண்டு வீசி வருகிறது, இதை எதிர்கொள்ளும் வகையில், வெனிசுலா அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
இதனிடையே, வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து ரஷ்யா கூறியதாவது;
கடந்த சில தினங்களாக வெனிசுலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போலவே, இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எந்தவொரு உறுதியான காரணமும் இல்லை. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல். அமெரிக்காவுக்கு வெனிசுலா எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. இந்த தாக்குதல் மேலும் விரிவடையக் கூடாது, எனக் கூறியுள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது; வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஐநா அடிப்படைக் கோட்பாடுகளையும், சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளையும் மீறும் செயலாகும். வெனிசுலா நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சர்வதேச பாதுகாப்பை வலியுறுத்தும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கியூபா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தயார் நிலையில் கொலம்பியா


வெனிசுலா எல்லையில், தங்கள் நாட்டு ராணுவம் நிறுத்தப்படும் என்று அண்டை நாடான கொலம்பியா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து வெனிசுலா மக்கள், தங்கள் நாட்டுக்கு அகதிகளாக வர வாய்ப்புள்ளதாக கருதும் கொலம்பியா, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த இரு நாடுகளும், 2 ஆயிரம் கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரோவிடம் விசாரணை


அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசுலா அதிபர் மதுரோ, 2020ம் ஆண்டில் நியூயார்க்கில் பதியப்பட்ட போதைப்பொருள் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக விசாரிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரத்தில் யார்?

அதிபர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், வெனிசுலா யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிப்பது யார் என்பது பற்றி குழப்பமான சூழல் நிலவுகிறது.


உன்னிப்பாக கவனிக்கும் ஐரோப்பிய நாடுகள்

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் அமெரிக்காவின் நடவடிக்கையால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக வரும் தகவல் மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த சூழ்நிலை குறித்து அமெரிக்கா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவு தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், ''மதுரோவுக்கு அதிபராக நீடிப்பதற்கான உரிமை இல்லை. சர்வதேச சட்டங்கள், ஐ.நா., விதிகள் மதிக்கப்பட வேண்டும்,'' என்றார்.
பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் மேக்சிமே பிரீவோட் கூறுகையில், ''ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,'' என்றார்.
அமெரிக்காவின் நடவடிக்கையை, ரஷ்யாவின் கூட்டாளி நாடானா பெலாரஸ் கண்டித்துள்ளது.

Advertisement