சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 நக்சல்கள்  சுட்டுக்கொலை: இறுதிகட்டத்தை நெருங்கியது ஒழிப்பு வேட்டை

1

சுக்மா: சத்தீஸ்கரில் இருவேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தேடப்பட்ட நக்சல் அமைப்பின் தலைவர் ஹுங்கா மத்கம் உட்பட 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் நக்சல் இயக்கத்தின் செயல்பாடு, இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'நாடு முழுதும் நக்சல்களின் நடமாட்டம், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரமடைந்தது.

சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிஷா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கியுள்ள நக்சல்களை வேட்டையாடும் பணியில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான சி.பி.ஐ., - மாவோயிஸ்டின் மத்திய குழு உறுப்பினராக இருந்த பசவராஜ், சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார்.

ஆந்திராவில் நடந்த தேடுதல் வேட்டையில், அந்த அமைப்பின் முக்கிய தளபதியான மாத்வி ஹித்மா, அவரது மனைவி உட்பட ஆறு பேர் சமீபத்தில் கொல்லப்பட்டனர்.

நக்சல் அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் பலர், ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரண் அடைய துவங்கினர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடியால் நக்சல் செயல்பாடுகள் முடங்கியதாலும், நீர்த்துப்போன நக்சல் சித்தாந்தத்தில் நம்பிக்கை இழந்ததாலும், நுாற்றுக்கணக்கான நக்சல்கள் அடுத்தடுத்து சரணடைய துவங்கினர்.

சரண் அடைந்த நக்சல்களுக்கு மத்திய அரசு உறுதி அளித்தபடி உதவித் தொகை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.

ஆயுதங்கள் பறிமுதல்





இந்நிலையில், சத்தீஸ்கரில் பல்வேறு சதி செயல்களில் தேடப்பட்டு வந்த நக்சல் அமைப்பின் உயர்மட்ட தலைவர் உட்பட 14 பேர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த சுக்மா மற்றும் பிஜப்பூர் ஆகிய மாவட்டங்களில் நக்சல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அங்கு மாவட்ட ரிசர்வ் படை மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுக்மா மாவட்டத்தின் பலோடி, பொட்டக்பள்ளி ஆகிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நக்சல் அமைப்பினர், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், தேடப்பட்ட ஹுங்கா மத்கம் உட்பட 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பாதுகாப்புப் படையினர், அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

285 பேர்



இதேபோல், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கஹன்பள்ளி பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல்களையும், பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.
இந்த தாக்குதலில் இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், மொத்தம் 14 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஸ்கரில் கடந்த ஆண்டில் மட்டும், 285 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

@block_B@ நக்சல் இயக்கத்தின் இறுதிகட்டம் சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'நக்சல்களின் பிடியில் இருந்த சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதிக்கு தற்போது, நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவை புதிய திசைகாட்டிகளாக உள்ளன. இது, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பு, மறுவாழ்வுக் கொள்கை, மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் விளைவு. வன்முறைப் பாதையை தேர்ந்தெடுப்போர், சரணடைய வேண்டும். சத்தீஸ்கரில் நக்சலிசம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பஸ்தார் பகுதியில் அமைதி, வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.block_B

@block_B@ தெலுங்கானாவில் 20 நக்சல்கள் சரண் தெலுங்கானாவில் நக்சல் அமைப்பின் உயர்மட்ட குழு தலைவர் உட்பட 20 பேர், அம்மாநில போலீசார் முன் நேற்று சரணடைந்தனர். மாத்வி ஹித்மா என்ற நக்சல் தலைவர் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் அமைப்பின் அடுத்தகட்ட தலைவராக அறியப்பட்ட பட்சே சுக்கா என்ற தேவா, அதே அமைப்பின் மூத்த தலைவர் ராஜி ரெட்டி உட்பட 20 பேர், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரண்அடைந்தனர். பழங்குடியின தலைவரான பட்சே, 2003ல் இந்த இயக்கத்தில் இணைந்து, சக்திவாய்ந்த வெடிபொருட்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார். கடந்த 2013ல், சத்தீஸ்கரின் ஜிரம் காட்டி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இத்தாக்குதலில் சத்தீஸ்கர் முன்னாள் அமைச்சர் மகேந்திர கர்மா உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பட்சே பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 75 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என போலீசார் அறிவித்தனர். தற்போது சரணடைந்துள்ள 20 நக்சல்களுக்கும், மறுவாழ்வு கொள்கையின்படி, 1.82 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இது, அவர்களின் வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப உதவும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.block_B

Advertisement