தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது 

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு தொழில்முனைவோர் கண்காட்சி, கருத்தரங்கம் நடக்கிறது.

இது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன், இளம் தொழில் முனைவோர் மைய புதுச்சேரி கிளை தலைவர் சிவா ஆகியோர் கூறியதாவது:

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கத்தின் அங்கமாக இளம் தொழில் முனைவோர் மையம் உள்ளது. இதன் புதுச்சேரி கிளை சார்பில், நாளை 10, மற்றும் 11ம் தேதிகளில் புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் தொழில்முனைவோர் கண்காட்சி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ரங்கசாமி கண்காட்சியை துவக்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, பெங்களூரு பகுதியை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் மைய உறுப்பினர்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். கண்காட்சியில் 200 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்துறை செயற்கை நுண்ணறிவினால் சந்திக்கபோகும் சவால்களை இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

வேலுார் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் துணை தலைவர் செல்வம், அமெரிக்க பிக்கியோ நிறுவனத்தின் தலைவர் கணேசன் ராதாகிருஷ்ணன், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தொழில்துறை வல்லுநர் சுரேந்தர், துபாய் தமிழ் சங்கத்தின் தலைவர் ஜெயந்திமாலா சுரேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். கண்காட்சி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement