பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி

3

புதுடில்லி: பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரின் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று (ஜனவரி 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் தபன் குமார் தேகா, ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் மத்திய ஆயுதப்படைப் படைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது; பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீரில் நிலையான அமைதியை நிலைநாட்டவும், பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கவும் உறுதி பூண்டுள்ளது.


மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளினால் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்ததாக இருந்த ஜம்மு காஷ்மீர், தற்போது அதில் இருந்து விடுபட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டப் பிறகு, ஏற்பட்ட நலன்களை தக்க வைப்பதற்கான அனைத்து பணிகளிலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதி பரிவர்த்தனைகளை முற்றிலுமாக முடக்க வேண்டும். பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

Advertisement