திருச்சூர் ரயில் நிலையத்தில் பற்றியது தீ: 600 இருசக்கர வாகனங்கள் சேதம்

திருவனந்தபுரம்: கேரளா, திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 600 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.


கேரள மாநிலம் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு இரண்டாவது கேட் அருகே உள்ள டூவீலர் பார்க்கிங் பகுதியில் தீ பிடித்துள்ளது.
முதலில் இரண்டு டூவீலர்களில் ஆரம்பமான தீ, பின்னர் பார்க்கிங் முழுவதும் பரவியது.
இதில் 600க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.


தொடர்ந்து பார்க்கிங் பகுதியை ஒட்டி இருந்த டிக்கெட் கவுன்டர் அறைக்கும் தீ பரவியது.
பரபரப்பான காலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


இந்த பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால் 600 டூவீலர்கள், பிளாட்பார்ம் கூரை, டிக்கெட் கவுன்டர் அறை முற்றிலுமாக நாசமானது. சோதனை ஓட்டத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜின் பாதி எரிந்த நிலையில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement