வெனிசுலா விவகாரம்: மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா கருத்து

14


பீஜிங்:வெனிசுலாவில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்கு அதிபர் மதுரோ அழைத்து செல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதி செய்தது. கண்கள் கட்டப்பட்டு, கை விலங்குடன் மதுரோ சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் படத்தை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.


சிறையில் அடைக்க அமெரிக்க அதிகாரிகள் மதுரோவை அழைத்து செல்லும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு, ரஷ்யா, சீனா, கியூபா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: வெனிசுலாவில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. மாறி வரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா மக்களின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யும்படி இந்தியா வலியுறுத்துகிறது.



அனைத்து தரப்பினரும், பேச்சுவார்த்தை மூலம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. தலைநகர் கராகஸ்சில் இருக்கும் இந்திய துாதரகம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அமெரிக்கா, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.



வெனிசுலா அரசை கவிழ்க்க முயற்சி நிறுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல். இந்த பிரச்னைக்கு இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சர்வதேச சட்ட மீறலாகும்!

மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகளை நான் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகிறேன். அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் வெனிசுலாவின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். இத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் மீறலாகும். ஒரு இறையாண்மை கொண்ட அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு சமமாகும்.


அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். காரணங்கள் எதுவாக இருந்தாலும், பதவியில் இருக்கும் நாட்டின் அதிபரை வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சிப்பது ஆபத்தான முன் உதாரணம் ஆகும்.


வெனிசுலா மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டும். சர்வதேச சட்டம் மற்றும் இறையாண்மையை மதிப்பது நாடுகளுக்கு இடையிலான அமைதியான உறவுகளுக்கு மிக முக்கியமானது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

Advertisement