மதுரோவை அமெரிக்கப் படை பிடித்தது எப்படி; வெளிவராத தகவல்கள்!

9

நமது சிறப்பு நிருபர்




வெனிசுலா அதிபர் மதுரோ, நள்ளிரவில் அமெரிக்கப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், போதை கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு விசாரிக்கப்பட உள்ளார். அவரை, அமெரிக்க டெல்டா படையினர் எப்படி பிடித்தனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாகவே இதற்காக திட்டமிட்ட அமெரிக்க கமாண்டோ படையினர், தங்கள் உளவாளிகள் மூலமாக, மதுரோவின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அவர் தங்கும் இடங்கள், அவற்றின் பாதுகாப்பு, பாதுகாவலர்கள், மதுரோவின் உணவு, உடைகள், உடன் இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உளவாளிகள் மூலம் அமெரிக்கப்படை சேகரித்து வைத்திருந்தது.

பல முறை ஒத்திகை



தாக்குதலுக்காக, ஒரு முறைக்கு பல முறை ஒத்திகையும் பார்த்து வைத்திருந்தனர். இதற்கென வெனிசுலா அதிபர் மாளிகை போலவே, ஒரு மாளிகையை உருவாக்கி, அதில் தினமும் ஒத்திகை பார்த்தனர்.

தாக்குதல் நடத்த நேரத்தை குறித்ததும், அந்த நேரம் தலைநகர் கராகஸ் முழுவதும் மின் தடை ஏற்படுத்தியது அமெரிக்க ராணுவம். தங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, அமெரிக்க ராணுவம் இந்த செயலை செய்து முடித்ததாக பெருமையுடன் கூறினார் அதிபர் டிரம்ப்.

படுக்கை அறை



இப்படி இருள் சூழச்செய்யப்பட்ட நகரில், ஹெலிகாப்டர்களில் சென்று இறங்கினர், அமெரிக்க டெல்டா படையினர், எலைட் கமாண்டோக்கள் மற்றும் சிஐஏ, எப்பிஐ உளவாளிகள். இரும்புக்கதவுகள் சூழ்ந்த ராணுவப் பாதுகாப்பில் இருந்த கோட்டையில் புகுந்த அமெரிக்க படை, பாதுகாவலர்களை சுட்டு வீழ்த்தியது. கடைசியில், தப்பிக்க வழியின்றி படுக்கை அறையினுள் இருந்த மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து வெளியே இழுத்து வந்தனர், அமெரிக்க படையினர்.

தடாலடி நடவடிக்கை



உடனடியாக, அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டரில் ஏற்றி அவர்களை போர்க்கப்பலுக்கு அழைத்து வந்தனர். ஒட்டு மொத்த நடவடிக்கையும் முடிந்த பிறகே, மதுரோவை கைது செய்த அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் டிரம்ப். இந்த தடாலடி நடவடிக்கை, ஒசாமா பின் லேடனை வீழ்த்த பாகிஸ்தானுக்குள் அமெரிக்க ராணுவம் புகுந்தது போன்றது என்று சர்வதேச வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

36 ஆண்டுக்கு பிறகு



கடந்த 36 ஆண்டுகளுக்கு முன், பனாமா நாட்டில் இதேபோன்ற தாக்குதலை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டது. அப்போது அதிபராக இருந்த மானுவேல் அன்டானியோ நொரீகாவை அமெரிக்கப்படையினர் முற்றுகையிட்டு கைது செய்தனர். அதேபோன்ற சம்பவம் தான் இப்போதும் நடந்துள்ளது; ஆனால், அதைக் காட்டிலும் கூடுதலான திட்டமிடலுடன் பெரிய அளவில் உயிர்ச்சேதம் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக, பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

Advertisement