ஆட்சியில் பங்கு என்று கூறுவது விஜய்யின் பெருந்தன்மை; சீமான்

9

சிவகங்கை: ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவரும், நடிகருமான விஜய் கூறுவது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதை வரவேற்கிறோம் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

சிவகங்கையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;

ஆட்சியில் பங்கு என்பதை அவர் (நடிகர் விஜய்) ஒரு கொள்கையாக வைத்திருக்கிறார். இங்கேயும் (தமிழகத்தில்) ஆட்சியில் பங்கு என்பதை பல கட்சிகள் கோரிக்கையாக வைக்கின்றன.

இதில் என்ன பார்க்க வேண்டும் என்றால் மத்தியில் ஆளுகின்ற கட்சிகள் எல்லாம் பங்கு கொடுக்க தானே செய்கிறது. காங்கிரசும் கொடுத்தது. இப்போது பாஜவும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து இருக்கிறது.

அதே போன்ற ஒரு முறை மாநிலத்தில் (தமிழகத்தில்) கேட்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்பது தம்பியின்(நடிகர் விஜய்) பெருந்தன்மையை காட்டுகிறது. அது வரவேற்கத்தக்கது.

இந்த தேர்தலிலும் எல்லா ஜாதியினருக்கும் (நாம் தமிழர் வேட்பாளர்கள்) இடம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் ஓட்டு போடுங்கள், போடாமல் போங்கள். எங்களிடம் ஜாதி பார்த்தீர்கள் என்றால் எனது தத்துவம் இறந்து போய் விடும்.

மதம் பார்த்து விட்டீர்கள் என்றால் போய்விடும். உண்மையில் நான் முன் வைக்கிற அரசியலைத் தான் நீங்கள் பார்க்க வேண்டும். எடுத்து வைக்கின்ற கருத்தை தான் பார்க்க வேண்டும்.

அதைவிட்டு விட்டு, இவர் என்ன ஜாதி, என்ன மதம் என்று பார்த்தால்... அதனால் தான் நாடு நாசமாகி போய்க் கொண்டு இருக்கிறது. ஜாதியில் நின்று சாதித்த ஒருத்தர் பெயரை. சொல்லுங்கள்.

திரும்ப, திரும்ப அந்த திராவிட கட்சிகளிடம் போய் இரண்டு, மூன்று சீட்டுக்காக, நிற்பதை தவிர வேறு என்ன நமக்கு வலிமை?

இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.

Advertisement