தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி காட்டம்

புதுச்சேரி: தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது என, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார்.


புதுச்சேரியில் நடந்த பா.ஜ., அனைத்து பிரிவு நிர்வாகிகள் மாநாட்டில் அவர் பேசியதாவது: உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 750 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளன. இது, 140 சதவீதம் அதிகம். இது பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சியால் தான் கிடைத்தது.


பாதுகாப்பான முதலீடு செய்வதற்கான நாடாக இந்தியா உருவாகி உள்ளது. முன்னேற்றமடைந்த நாடுகளில் இருக்ககூடிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறோம். நாட்டில் 25 ஆயிரம் கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார். நமது அண்டை நாடுகளில் அனைத்திலும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னை உள்ளது. ஆனால் இங்கு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.


இதற்கு காரணம் பிரதமர் மோடியின் ஆட்சி. பிரதமர் தமிழக மக்கள் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். அவரது முயற்சியால், இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை மீட்டுள்ளார். ஆனால் இங்குள்ள சில கட்சிகள் அவருக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருகின்றன.


தமிழகம் ஊழலில் திளைத்து வருகிறது; வாரிசு அரசியல் கொடிகட்டி பறக்கிறது. மேலும் அவர்கள் மொழியால் வடஇந்தியா, தென் இந்தியா என பிரித்து வைக்கின்றனர். பிரதமர் மோடி தமிழக மக்களுக்கென திட்டங்களை செய்து வருகிறார். அரசியலுக்காக இல்லை. மக்கள் மீது உள்ள அன்பினால். மோடி வருகைக்கு பின் தமிழகம் புதுச்சேரியில் பா.ஜ., அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.


கடந்த 2021 தேர்தலில், புதுச்சேரியில் பா.ஜ., ஓட்டு 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. 6 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். வரும் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். தேர்தலில் பா.ஜ., போட்டியிடும் தொகுதியை கண்டிப்பாக உயர்த்துவோம். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு கிஷன் ரெட்டி பேசினார்.

Advertisement