சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு

3


வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 'ஆப்பரேஷன் ஹாவ்க்' என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.


சிரியாவில் உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அங்கு, ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தி அமெரிக்கா தாக்குதலின் போது அமெரிக்க பாதுகாப்பு படையினர் இருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் டிரம்ப் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு நிச்சயமாக பதிலடி கொடுப்பேன் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்கா படைகளின் கவனம் சிரியா மீது திரும்பி உள்ளது. அதிபர் டிரம்ப் உத்தரவின் படி, சிரியாவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் ஹாவ்க்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.



இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சிரியாவில் 35க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. F-15, A-10 போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.


இந்த நடவடிக்கையின் நோக்கம், அமெரிக்க படைகள் மற்றும் நட்புப் படைகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பது, எதிர்கால அச்சுறுத்தல்களை நீக்குவது மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். எங்கள் படையினருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும், எங்கிருந்தாலும், கண்டுபிடித்து அழித்துவிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement