நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு

6


நார்வே: ''நோபல் பரிசு ஒருவருக்கு வழங்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் அது அவருடையதுதான்' என இந்த பரிசைப் பெற்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோவுக்கு நோபல் அமைப்பு பதிலளித்துள்ளது.


அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் எட்டு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், 2025ம் ஆண்டுக்கான பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை. இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் தொடர்ந்து புலம்பி வருகிறார்.

சில தினங்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். என்னை விட வேறு யாராவது அதற்கு தகுதியானவர்கள் என என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. வேறு யாரும் போர்களை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.



இதற்கிடையே, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, ''எனக்கு கிடைத்த நோபல் பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.


தற்போது மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து நோபல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நோபல் பரிசு, ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருடையதுதான்.


அதை மற்றவர்களுக்கு தரவோ, பகிரவோ, ரத்து செய்யவோ முடியாது. இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்திற்கு பொருந்தும். நோபல் பரிசை ஒருவரிடம் இருந்து பறிக்க சட்டப்படி இடமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement