கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்

2

திரைகடலோடியும் திரவியம் தேடு என முன்னோர் சொல்ல கேட்டிருப்போம். அந்த வரிசையில் திரைகடலோடியும் கர்நாடக இசையை பல நாடுகளிலும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறார் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கர்நாடக இசைக் கலைஞர் உமாகுமார்.

'இன்னமும் சந்தேகம் பாடலாமோ' என்ற கர்நாடக இசை பாட்டை கேட்டவுடன் இசை ரசிகர்கள் இது இசைக்கலைஞர் சாத்துார் ஏ.ஜி.சுப்பிரமணியம் பாட்டு என கூறி விடுவர். அந்தளவுக்கு சிறந்த இசைகலைஞராக திகழ்ந்தவரின் பேத்தி தான் உமாகுமார்.

இவரது முதல் குருவும் தாயாருமான விதுஷி லட்சுமிசுந்தரமும் கர்நாடக இசைக் கலைஞர் தான். ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதுபோல தெய்வங்கள், கர்நாடக சங்கீத பாடலாசிரியர்கள், ராகங்கள் என ஒரு பொருளை மையமாக கொண்டு இசைக்கச்சேரிகளை நடத்தி வருவதில் சிறந்து விளங்கும் உமாகுமாருக்கு 'சாய் ஞான சரஸ்வதி' உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள் பெருமை சேர்த்துள்ளன.

சிறு வயதிலிருந்தே பக்தி, ஆன்மிக மரபுகளில் நம்பிக்கை கொண்ட உமாகுமார் கர்நாடக இசையை பல நாடுகளிலுமுள்ள இளையதலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

சமீபகாலமாக மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசையான மராத்தி அபாங்க் மீது ஆர்வம் கொண்டவராகவும் திகழ்கிறார். இதற்காக மும்பையைச் சேர்ந்த மராத்தி பாடகர் விநாயக் பிரபுவிடம் அபாங்க் பாடல் பயிற்சி பெற்றுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரசிகர்கள் மையத்தில் அபாங்க் கச்சேரியையும் நடத்தி மகிழ்வித்திருக்கிறார்.

மார்கழி என்றாலே நகரங்களில் சங்கீத சபாக்களில் இசை உற்ஸவங்கள் இடம் பெறும். இதுபோல இசை உற்ஸவங்கள் நடக்கும் நாடுகளுக்கு சென்று கர்நாடக இசைகச்சேரி நடத்தி வருகிறார் உமாகுமார். சென்னை சங்கீத சபாக்களில் உமாகுமாரின் இசைக்கச்சேரி பிரபலம். இதற்காக தாயகம் வந்துள்ள உமாகுமார் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது...

சென்னை சொந்த ஊர். வளர்ந்தது, படித்தது கர்நாடக இசையில் முதுகலை பட்டம் பெற்றது சென்னையில் தான். இசைக் குடும்பத்தில் 3வது தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதால் சிறு வயதிலேயே கர்நாடக இசை மீது ஈர்ப்பு.

அம்மா லட்சுமிசுந்தரம் தான் முதல் குரு. பிறகு கர்நாடக இசை கலைஞர் ராஜி கோபாலகிருஷ்ணனிடம் பயிற்சி பெற்று வருகிறேன். சுவிட்சர்லாந்தில் இருந்தாலும் இந்திய பாரம்பரிய இசையை எல்லோருக்கும் கொண்டு செல்ல ஆர்வம் உண்டு. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் என பல நாடுகளுக்கு சென்று கர்நாடக இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறேன்.

பல கர்நாடக மற்றும் அபாங்க் பாடலாசிரியர்கள் பக்தி நிரம்பிய பாடல்களை உருவாக்கியுள்ளனர். இந்த தெய்வீக சங்கீதத்தை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோரையும் இந்த இசை சேர வேண்டும் என தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி மொழிகளிலும் பாடி வருகிறேன்.

இந்தாண்டு பாரதத்தின் 36 பாரம்பரிய விழாக்களை கொண்டாடும் வகையில் உத்சவ்-36 என்ற இசைத் தொடரை நடத்தி வருகிறேன். இதையொட்டி வெளியான சிறப்பு காணொளிக்கும் வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு மார்கழி சீசனில் ஆங்கில அகரவரிசை எழுத்துக்களை அடிப்படையாக கொண்ட ராகங்களில் ஆல்பா மாலிகா நடத்தியதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

சென்னை மயிலாப்பூர் தியாகராஜ வித்வத் சமாஜத்தில் கே ராகம், நங்கநல்லுார் தியாகராஜ சங்கீத சமாஜத்தில் எஸ் ராகம், ஸ்ரீ பவமான அறக்கட்டளையில் எம் ராகத்தை கருப்பொருளாக கொண்டு கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தியதும் வரவேற்பை பெற்றது. கே கருப்பொருளில் கமாஸ், கர்நாடக சுத்தாசாவேரி, கேதாரம், கீரவாணி, கர்ணரஞ்சனி, கல்யாணி, காமவர்த்தினி, கதனகுதுஹலம், குறிச்சி ராகங்களில் பாடல்களை வழங்கினேன்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு வர்ணம், கீர்த்தனை, ஒரு குறுகிய முக்கிய, பாடல், துக்கடா, தேவர்நாமா, தில்லானா, மங்கலமும் அடங்கியிருந்தது. இந்த ராகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்கில எழுத்தில் துவங்கும். இது கர்நாடக இசையின் ஆழத்தையும், செழுமைமையும் காட்டுவதாக உள்ளது. இத்தகைய தீம் கச்சேரிகள் கர்நாடக இசையின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது, ஆர்வத்தையும் துாண்டுகிறது என நம்புகிறேன். என்னை போன்ற கலைஞர்களுக்கு தொடர்ந்து புதிய பாடல்களை கற்று கொள்ளவும் ஊக்குவிக்கிறது.

கர்நாடக சங்கீதம், அபாங்க் குறித்து எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதொடர்பான கச்சேரிகளை கேட்க வேண்டும். அதன் மூலம் ரசிகர்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என நம்புகிறேன் என உற்சாகத்துடன் தெரிவித்தார்.

Advertisement