அரசு ஊழியர்களை தந்திரமாக ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்: பழனிசாமி

3

சேலம்: ''அரசு ஊழியர்களை தந்திரமாக, முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார். அரசாணை வெளியாகும்போது தான், தி.மு.க. அரசைப் பற்றி அரசு ஊழியர்கள் தெரிந்து கொள்வர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், நேற்றிரவு நடந்த பிரசார கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியது தான், தி.மு.க.,வின் சாதனை. ஒரு குடும்பம் நன்மை பெறவே, தி.மு.க., ஆட்சி நடக்கிறது. நான்கே முக்கால் ஆண்டு துாங்கிவிட்டு, இப்போதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு ஞானோதயம் பிறந்து, புதுப்புது திட்டங்களை அறிவிக்கிறார்.

சுய உதவி குழுக்கள் எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய, 44 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கின்றனர். பணத்தை சுருட்டவே, ஆய்வு என்ற போர்வையில் நிதி ஒதுக்கியுள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு கூட்டணி அமையவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். பொறுத்திருந்து பாருங்கள். அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமையும். பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்.

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றனர். இப்போது புதிய திட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள் கேட்டது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால், ஸ்டாலின் குறிப்பிடுவது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம். பெயரை மாற்றி ஏமாற்றுகிறார்.

வேலை நிறுத்தத்தை நிறுத்த, தந்திரமாக உத்தரவு வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். அரசாணை வெளியிடுகிறபோதுதான், அரசு ஊழியர்கள், இந்த அரசைப்பற்றி தெரிந்து கொள்வர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement