கீழக்கரை அருகே கடலில் ஆமைகளை இறைச்சிக்காக கொன்ற 4 பேர் கைது

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை உயிரினமான கடல் ஆமையை இறைச்சிக்காக கத்தியால் வெட்டி கொன்ற நான்கு மீனவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

கீழக்கரை சில்வஸ்டர் 52, சத்யராஜ் 40, பாலமுருகன் 35, முனியசிவா 33, நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று காலை 8:00 மணிக்கு வலையில் சிக்கிய இரு அரிய வகை பச்சை கடல் ஆமைகளை பிடித்து இறைச்சிக்காக கொன்றனர்.

அப்பா தீவு அருகே கடலில் ரோந்து வந்த மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமையை கொன்ற 4 பேரையும் கைது செய்து, தலா 50, 35 கிலோ எடை கொண்ட ஆண் ஆமைகளை பறிமுதல் செய்தனர்.

வனத்துறையினர் கூறியதாவது: கடலில் மீன் பிடிக்கும் பொழுது எதிர்பாராமல் வலையில் சிக்க கூடிய அரிய வகை உயிரினங்களை மீண்டும் கடலில் விடுவதற்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்.

ஜன., மாதத்தில் இருந்து ஏப்., மாதம் வரை ஆமைகள் கடலில் கடற்கரையோர பகுதிகளில் அதிகளவு முட்டையிடுவதற்காக வரும். எனவே ஆமைகளை பாதுகாப்பது நமது கடமை என்றனர்.

Advertisement