பாஜ கூட்டணியால் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு வரணும்: ரங்கராஜ் பாண்டே

40


கோவை: பாஜவை கூட்டணிக்கு வைத்தோம்; நாம் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு ஏற்பட வேண்டும் என்று கோவையில் நடந்த பாஜ தொழில் வல்லுனர் கருத்தரங்கில் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசினார்.

கோவையில் நடந்த பாஜ தொழில் வல்லுனர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:
இந்த அரங்கத்தில் கூடி இருப்பவர்கள், ஒவ்வொருவரும் ஒரு 15 பேரை ஓட்டு போட வைப்பேன் என்று சொன்னால், அதுக்கு மேல நீங்கள் கட்சிக்கு செய்ய வேண்டிய விஷயம் ஏதுமே இருக்காது.


திருமங்கலம் பார்முலா




நான் நின்று ஓட்டு போட அழைத்து சென்றேன். அவர்கள் பாஜவுக்கு ஓட்டு போடுகிறார்கள் அல்லது வேற கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பது பிரச்னை இல்லை. நீங்கள் ஒரு 15 பேரை ஓட்டு போட அழைத்து சென்று நிற்க வைத்தால், அது உங்களுக்கு பெரிய அளவில் 'ஹெல்ப்' செய்யும்.

திருமங்கலம் பார்முலா என்று கேள்விபட்டு இருப்பீர்கள். அதில் அழகிரி செய்தது இந்த மைக்ரோ மேனேஜ்மென்ட் தான். பூத்தில் யார் ஓட்டுப்போட்டார்கள், யார் ஓட்டுப்போடவில்லை என்பதை பார்த்து விட்டு தெளிவாக கொண்டு வந்து எல்லாரையும் ஓட்டு போட வைப்பது.

@quote@இதுதான் நீங்கள் ரொம்ப முக்கியமாக செய்ய வேண்டியது. எஸ்ஐஆர் புண்ணியத்தில் தமிழகத்தில் 97 லட்சம் பேரை காலி பண்ணிவிட்டாச்சு, அப்பொழுது தான் சதவீதம் தானாகவே கூடும். அதை தாண்டி நீங்கள் இன்னும் அதிகமாக கொண்டு வருவதற்கான வழியை பார்க்க வேண்டும்.quoteஅடுத்தபடியாக, உருப்படியான விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அது தமிழகத்தில் இல்லைவே இல்லை. 80 கோடி பேருக்கு 5 வருடம் முழுக்க முழுக்க ஒரு பைசா செலவு இல்லாமல், ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


கொஞ்சம் கூட...!




கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். 5 வருடம் இடைவிடாமல் அனைத்து மாதமும் 80 கோடி பேருக்கு விலை இல்லாமல் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருப்பதாக நினைத்து விட்டார்கள். ரேஷன் கடையில் உட்கார்ந்து இருப்பவர்கள், எல்லோரும் தளபதி படத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறார்கள்.

இந்த ரேஷன் பொருட்களை யார் கொடுத்தார், இதற்கு நிதி ஒதுக்கியது யார்? என்ற கேள்வியே இல்லாமல் போய்விட்டது. கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் உதயநிதி ஒரு ரூபாய் கொடுத்தால், 27 பைசா தான் வருகிறது என்று சொல்கிறார். தமிழகத்திற்கு நிதியே வரவில்லை என்கின்றனர்.

ரூ.11 லட்சம் கோடி



பிரதமர் மோடியில் இருந்து சமீபத்தில் புதுக்கோட்டையில் பேசிய அமித் ஷா மற்றும் நமது மாநிலத்தை சேர்ந்த எல்.முருகன் வரை எல்லாரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகின்றனர். ஆதாரப்பூர்வமாக, ஆவணப்பூர்வமாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. ஆனால் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்று சொல்கின்றனர். இவர்கள் போல் ஒதுக்கவில்லை என்ற காரணத்தினால் அவ்வாறு சொல்லிவிட்டார்கள் என்று தெரியவில்லை. 11 லட்சம் கோடி ரூபாய் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.


பூச்சாண்டி மாதிரி




எஸ்ஐஆர் என்பதை எல்லாரும் ஒரு பூச்சாண்டி மாதிரி கருதினார்கள். தமிழகத்திலிருந்து சத்தம் போடாத கட்சியே கிடையாது. பாஜ மட்டும்தான் வழக்கம் போல் நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தது.

பீஹாரில் எஸ்ஐஆர் அறிமுகம் செய்ததால், 66 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டபோது எல்லாரும் கத்தினார்கள். திரும்ப ஆளும் பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை பேர் எனது பெயர் இல்லை என்று கேஸ் போட்டு இருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
@quote@தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். எஸ்ஐஆர் அறிமுகம் செய்த போது கத்தியவர்கள் எல்லாம், நடைமுறைக்கு வந்த பிறகு யாருமே பேசாமல் அமைதியாகி விட்டார்கள். quoteஅதிகமான பெயர்கள் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் தான் நீக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலே சின்ன தொகுதிகளில் வரிசையில் இருப்பது இவைதான்.


40ல் 38





40 தொகுதி கொடுத்தால், 38 எம்எல்ஏக்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று வர வேண்டும். அந்த மாதிரியான வளர்ச்சி தான் மஹாராஷ்டிராவிலும், பீஹாரிலும் பாஜவை நம்பர் ஒன் கட்சியாக மாற்றியது. அந்த மாநிலத்தில் வேறு கட்சிகள் முதல் இடத்தில் இருக்க, பாஜ இரண்டாவது இடத்தில் இருந்தது.

ஆளுக்கு பாதி சீட்டு வரை பிரித்துக் கொண்டார்கள். பாஜ வென்ற அளவுக்கு சிவசேனா வெல்லவில்லை, பாஜ வென்ற அளவுக்கு நிதிஷ்குமார் கட்சி வெல்லவில்லை. நாளைக்கு அதிமுக, பாஜ கூட்டணியில் எத்தனை சீட்டு ஒதுக்கப்பட்டாலும், அத்தனை சீட்டையும் வென்று கொடுப்போம். உங்கள் தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர்கள் இருந்தாலும், உங்கள் வேட்பாளரை வெல்ல வைப்போம் என்றால்தான் பாஜவுக்கு ஒரு ஓட்டு இருந்திருக்கிறது என்பது தெரியும்.

ஒரு எம்எல்ஏ கூட




விடுதலை சிறுத்தை கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் இருக்கின்றனர். அவர்கள் தனித்து நின்றால் ஒரு எம்எல்ஏ கூட வாங்க முடியாது. கூட்டணி மூலமாக 4 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்களை வென்றிருக்கிறார்கள். அதனால்தான் திமுக அவர்கள் நம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

@quote@பாஜவை கூட்டணியில் சேர்த்தோம்; நாம் ஜெயித்தோம் என்ற எண்ணம் அதிமுகவுக்கு ஏற்பட வேண்டும். நல்ல வேளை, பாஜவை கூட்டணியில் வைத்திருந்தோம்; அதனால் ஜெயித்தோம் என்ற நிலையை உருவாக்குவதற்கு செயல் வீரர்கள் அனைவரும் செயலில் இருக்க வேண்டும்; பேச்சில் இல்லை. களத்தில் இருக்க வேண்டும். quote

234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெல்ல வைப்பதற்கு உழைப்பை கொடுப்போம் என்று சொன்னால்தான் உங்களுக்காக களம் காத்திருக்கும். களம் காத்திருப்பதற்கு நீங்கள் தயாரா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு ரங்கராஜ் பாண்டே பேசினார்.

தினமலர் நேரலை ஒளிபரப்பு



ரங்கராஜ் பாண்டே பேச்சை வீடியோ வாயிலாக காண இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement