கரூர் சம்பவம்; விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

21

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தவெக தலைவர் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதனை இயக்கி சோதனை செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல், கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். கரூர் கலெக்டர், எஸ்பி, டிஎஸ்பி என முக்கிய அதிகாரிகளை டில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அதேபோல, தவெக முன்னணி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஜனவரி 12ம் தேதி தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க சிபிஐ அதிகாரிகள் கரூர் வேலுச்சாமிபுரத்தில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அவரது பிரசார வாகனத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

பிரசார வாகனத்தை இயக்கி சோதனை செய்த அதிகாரிகள், வாகனம் மீது விஜய் பேசும் இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர்.



மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் காலை 11 மணிக்கு விஜய் பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்ய துவங்கி மதியம் 2 மணி வரை சுமார் 3 மணி நேரமாக அளந்து தடயங்கள் சேகரித்தனர். மேலும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3 மணிக்கு மேல் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பஸ் டிரைவரை இயக்க சொல்லி, அதனையும் வீடியோ ஒளிப்பதிவு செய்தனர்.

மத்திய தடயவியல் துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கரூர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தவெக தலைவர் விஜய் பிரசார வாகனம் கொண்டு வரப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் சில ஊடகங்களில் சிபிஐ அதிகாரிகள் விஜய் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்திருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement