தி கிரேட் 'கிரேக்' மறைந்தது


கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவின் அடையாளமாகவும், அந்நாட்டின் பெருமையாகவும் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற 'கிரேக்' என்ற ஆண் யானை, தனது 54-வது வயதில் இயற்கை எய்தியது. ஒரு மாபெரும் சரித்திரம் மறைந்த துக்கத்தில் கென்ய நாடே மூழ்கியுள்ளது.

யார் இந்த கிரேக்?
ஆப்பிரிக்காவின் எஞ்சியிருக்கும் மிகச்சில 'சூப்பர் டஸ்கர்' வகை யானைகளில் ஒன்றான கிரேக், 1972-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அம்போசெலி காடுகளில் 'கசாண்ட்ரா' என்ற யானைக்குப் பிறந்தது. ஆப்பிரிக்காவில் 'சூப்பர் டஸ்கர்' என்று அழைக்கப்பட வேண்டுமானால், ஒரு யானையின் ஒவ்வொரு தந்தமும் குறைந்தது 45 கிலோ எடை கொண்டிருக்க வேண்டும். கிரேக் அந்தத் தகுதியைத் தாண்டி தனது ஒவ்வொரு தந்தத்தின் எடையையும் 50 கிலோவாக கொண்டிருந்தது அது மட்டுமன்றி, அதன் பிரம்மாண்டமான தந்தங்கள் தரையைத் தொடும் அளவிற்கு நீளமாக வளர்ந்து வியக்க வைத்தது.
Latest Tamil News
சுற்றுலாவின் நாயகன்
வனவிலங்குகளைக் காண்பதற்காக உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் கென்யாவின் பொருளாதாரம் சுபிட்சம் பெற்றுள்ளது. அங்கு வரும் பயணிகளின் மனம் கவர்ந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தது கிரேக். அதன் பிரம்மாண்ட தோற்றமும், அதற்கு நேர்மாறான சாந்தமான குணமும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் மிரளாமல், அவர்கள் புகைப்படம் எடுக்கும் வரை பொறுமையாக நிற்கும் அதன் குணம் வியப்பிற்குரியது.

இயற்கையின் நியதி
யானைகளின் சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகளாகும். முதுமை எய்தும்போது பற்கள் தேய்ந்து விழுந்து விடுவதால், அவற்றால் உணவைச் சரியாக மென்று உண்ண முடியாது. இதனால் ஏற்படும் செரிமானக் கோளாறு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக யானைகள் உயிரிழப்பது இயற்கையின் விதி. கிரேக்கும் இதே காரணத்தால்தான் மறைந்தது. கடந்த இரண்டு வாரங்களாகச் சோர்வுற்று இருந்த கிரேக்கை, மருத்துவர்கள் தீவிரமாகப் போராடிப் பார்த்தும் இயற்கையின் நியதியை மாற்ற முடியவில்லை.

பாதுகாப்பின் சின்னம்
கிரேக் வெறும் யானை மட்டுமல்ல, கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டத்தின் வெற்றிக் குறியீடு. யானைத் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்களின் கண்களில் படாமல், இத்தனை ஆண்டுகள் காட்டில் சுதந்திரமாக வாழ்ந்ததே ஒரு பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. மாசாய் சமூக மக்களுடன் எந்தவிதப் பிணக்கும் இன்றி வாழ்ந்த கிரேக், பல குட்டிகளுக்குத் தந்தையாகித் தனது வலிமையான மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் சென்றுள்ளது.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகள்: ஒரு ஒப்பீடு
நமது ஆசிய யானைகளுக்கும், கிரேக் போன்ற ஆப்பிரிக்க யானைகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உடல் அளவிலும், காதுகளின் அளவிலும் பெரியவை. ஆசிய யானைகளுக்குத் தலையில் இரண்டு மேடுகள் இருக்கும்; ஆனால் ஆப்பிரிக்க யானைகளுக்கு ஒற்றை நெற்றி மட்டுமே இருக்கும்.

விலைமதிப்பற்ற தந்தங்கள்
கிரேக்கின் ஒவ்வொரு தந்தமும் 50 கிலோவுக்கும் (110 பவுண்டுகள்) மேல் எடை கொண்டவை. அதாவது, இரண்டு தந்தங்களும் சேர்த்து 100 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்டிருந்தன. கறுப்புச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டாலும், உயிரியல் ரீதியாக இவை விலைமதிப்பற்றவை. தற்போது, கென்ய வனவிலங்கு அதிகாரிகள் அந்தத் தந்தங்களைச் சிதையாமல் பாதுகாத்து வருகின்றனர்,விரைவில் அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்து காட்சிப்படுத்துவர்.

கிரேக் உயிரோடு இருந்தபோதும் ஓர் உலக அதிசயம்தான், இன்று இறந்த பிறகும் ஓர் உலக அதிசயமே!

-எல்.முருகராஜ்

Advertisement