அமெரிக்க சிறையில் தவிக்கும் மதுரோவை மீட்க சிறப்பு ஆணையம்; இடைக்கால அதிபர் ரோட்ரிக்ஸ் அறிவிப்பு

2

கராகஸ்: வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மீட்க சிறப்பு ஆணையம் ஒன்றை அமைத்துள்ளார்.



தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அரசியல் தட்பவெப்ப நிலை மாறியிருக்கிறது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரின் மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க சிறப்பு படையினர் அதிரடியாக கைது செய்து, தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நியூயார்க்கில் உள்ள சிறையில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார்.


நிக்கோலஸ் மதுரோவின் கைது எதிரொலியாக வெனிசுலாவில் நிர்வாக சீர்குலைவு மற்றும் நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்போதைய துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது. வெனிசுலாவின் பாதுகாப்பு, நிர்வாகம் ஆகியவற்றை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.


அதே நேரத்தில், வெனிசுலாவில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடக்கும் வரை அந்நாட்டை தாங்களே நிர்வகிக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். இந் நிலையில், நிக்கோலஸ் மதுரோவின் கைதை கடுமையாக கண்டித்த இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டுமே, அவரின் கைது நடவடிக்கை அமெரிக்காவின் சட்ட விரோத கடத்தல் என்று விமர்சித்து இருந்தார்.


இந் நிலையில், நிக்கோலஸ் மதுரோவின் விடுதலையை முன்னெடுக்கும் வகையில், அதற்கான முயற்சிகளை வழிநடத்தும் முக்கிய அம்சமாக, சிறப்பு ஆணையம் ஒன்றை இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியமித்துள்ளார். இந்த ஆணையத்தில் வெனிசுலா தேசிய சட்டசபை தலைவரான அவரது சகோதரர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ், வெளியுறவு அமைச்சர் யுவான்கில் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ப்ரெடி நானென்ஸ் இந்த ஆணையத்தின் ஒரு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


சிறப்பு ஆணையமானது, சர்வதேச அளவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு, மதுரோவின் விடுதலைக்கு ஆதரவாக மக்களிடம் பிரசாரத்தை முன்னெடுக்கும். மேலும், தற்போது நீடிக்கும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் மதுரோவின் சட்டப்பூர்வ விடுதலையை வலியுறுத்தும் வகையில் செயல்படும்.

Advertisement