கன்னட தாய் வாழ்த்து; உறுதி செய்தது ஐகோர்ட்

பெங்களூரு: மறைந்த மைசூரு அனந்தசாமி இயற்றிய 'ஜெய பாரத ஜனனியே தனுஜாதே...' என்ற கன்னட தாய் வாழ்த்து பாடுவ தொடர்பாக, மாநில அரசு பிறப்பத்த உத்தரவை எதிர்த்து பாடகர் கிக்கேரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

மைசூரை சேர்ந்த அனந்தசாமி இயற்றிய 'ஜெய பாரத ஜனனியே தனுஜாதே...' என்ற கன்னட தாய் வாழ்த்து பாடுவதை, 2 நிமிடம் 30 வினாடிகள் கட்டாயமாக்கி, 2002 செப்., 25ல் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பாடகர் கிக்கேரி கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், 'கன்னட தாய் வாழ்த்து பாடலில், ஒரு பல்லவி, இரண்டு சரணங்களுக்கு மட்டுமே, அனந்தசாமி இசை அமைத்தார். பாடகரும், இசையமைப்பாளருமான அஸ்வத், கன்னட தாய் வாழ்த்து பாடலின் அனைத்து சரணங்களுக்கும் இசை அமைத்து உள்ளார். எனவே, 'அனந்தசாமி இசையமைத்த பாடலையே பாட வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கிக்கேரி கிருஷ்ணமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் விசாரணை நடந்து வந்தது. நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், 'அரசு உத்தரவை ஏற்றுக் கொண்ட முந்தைய நீதிமன்றத்தின் தீர்ப்பை, இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது' என்றனர்.

Advertisement