உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு

பிலிபிட்: உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தில் சக பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பயிற்சி டாக்டர் ரமிஸுதீன் நாயக்கை நீக்க, கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிலிபிட் முஸ்லிம் இமாம் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அம் மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது.

அந்த சட்டத்தின்படி ஆசைக்காட்டியோ, வற்புறுத்தியோ மதம் மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், பிலிபிட் மாவட்டத்தில் இயங்கி வரும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலையில் ஜூனியர் டாக்டராக பயிற்சி பெற்று வரும் ரமிஸுதீன் நாயக் என்பவர், சக பெண் டாக்டரிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டார்.

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த ரமிஸுதீன், பின்னர், அந்த பெண் டாக்டரின் வயிற்றில் வளர்ந்த கருவை வற்புறுத்தி கலைக்க வைத்துள்ளார். முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்.

பெண் டாக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பல்கலையின் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. அதில், ரமிஸுதீன் குற்றவாளி என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கை கையில் எடுத்த மாநில போலீசார், கடந்த 10ம் தேதி டாக்டர் நாயக்கை கைது செய்தனர். 'லவ் ஜிஹாத்' போர்வையில் மாற்று மதத்தை சேர்ந்த டாக்டரை, அவர் ஏமாற்றினாரா, மதமாற்ற கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

மேலும், நாயக் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து, பெண் டாக்டருடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து நாயக்கிற்கு திருமணம் செய்து வைத்த பிலிபிட் மாவட்ட இமாம் ஜாஹித் ஹஸன் ரானாவிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

அதன் பின், ஜாஹித் ஹஸன் ரானா கூறியதாவது :

டாக்டரின் திருமணம் தொடர்பான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளேன். முதல் திருமணம் ஒரு ஹிந்து பெண்ணுடன் தான் அவருக்கு நடந்தது.

இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்து இருந்தனர். மதம் மாற்றப்பட்டு இந்த திருமணம் நடத்தப்படவில்லை. திருமண ஆவணத்திலும் பெண்ணின் பெயர் மாற்றப்படவில்லை. டாக்டர் நாயக் மீது மதமாற்ற புகார் அளித்தது அந்த பெண் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement