பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி

5


புதுடில்லி: தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட பார்லி குழுவின் விசாரணையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.


டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அங்குள்ள அரசு பங்களாவில் வசித்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது, வீட்டில் உள்ள ஓர் அறையில், எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். கடந்தாண்டு நடந்த பார்லி, மழைக்கால கூட்டத்தொடரில், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர்.


இதை ஏற்ற ஓம்பிர்லா, விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். அதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பதிலளிக்க லோக்சபா, ராஜ்யசபா செயலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. லோக்சபா, ராஜ்யசபா தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


அதில், 'யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு, உண்மைக்கு புறம்பானது. அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, விசாரணைக் குழு அமைக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த விவகாரத்தில், யஷ்வந்த் வர்மா மீது எந்த பாரபட்ச நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, நீதிபதிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பார்லிமென்ட் குழு விசாரணையை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

Advertisement