இதே நாளில் அன்று

ஜனவரி 7:

சென்னையில், வரதராஜுலு - தனபாக்கியவதி தம்பதியின் மகனாக, 1934, ஜூலை 28ல் பிறந்தவர் குமரேசன் எனும் வி.குமார்.

இவர், சென்னை செயின்ட் பால்ஸ் பள்ளி, லயோலா கல்லுாரியில் படித்தார். தொலைபேசி இலாகாவில் பணியாற்றியபடியே, இசைக்குழுவை நிர்வகித்து வந்தார். மணிவேந்தன் என்ற புனை பெயரில், 'கண் திறக்குமா' என்ற இசை நாடகத்தை எழுதி, அரங்கேற்றினார்.

கே.பாலசந்தரின், 'வினோத ஒப்பந்தம்' நாடகத்துக்கு இசையமைத்தார். தன், நீர்க்குமிழி படத்தில், இவரை இசையமைப்பாளராக்கிய பாலசந்தர், தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்.

தன் இசையை வித்தியாசப்படுத்த, இந்திய, மேற்கத்திய கருவிகளை பயன்படுத்தினார். 'காதோடு தான் நான் பாடுவேன், உன்னிடம் மயங்குகிறேன், நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்' உள்ளிட்ட இவர் இசையமைத்த பாடல்கள் பிரபலமாகின.

நாணல், ஆயிரத்தில் ஒருத்தி, கண்ணாமூச்சி, மல்லிகைப்பூ, எதிர்நீச்சல் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். எம்.ஜி.ஆரால், 'மெல்லிசை மாமணி' என புகழப்பட்ட இவர், 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளையும் பெற்றார். இவர் தன், 62வது வயதில், 1996ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement