கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்க அமெரிக்கா மெகா திட்டம்!

3

நமது நிருபர்

வெனிசுலாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அங்குள்ள கச்சா எண்ணெய் ஆலைகளில் உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளது. அதிகப்படியான கசடுகள் நிறைந்த வெனிசுலா கச்சா எண்ணெய் சந்தைக்கு வந்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுத்தும் என, இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.


தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ, போதை பொருள் கடத்தலுக்கு உதவி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.
அவரது உத்தரவுப்படி களமிறங்கிய அமெரிக்கப் படைகள், மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை கைது செய்து நாடு கடத்தின.

கண்டனம்




போதை பொருள் கடத்தலை தடுக்கவே இந்நடவடிக்கை என அமெரிக்கா கூறினாலும், வெனிசுலாவில் கொட்டி கிடக்கும் கச்சா எண்ணெய் வளத்தை கைப்பற்றுவது தான் உண்மையான நோக்கம் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது. இதனால், அமெரிக்கா நடத்திய இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.


உலகளவில், வெனிசுலாவிடம் இருக்கும் கச்சா எண்ணெய் வளம் இத்தனைக்கும் வெறும், 18 சதவீதம் தான். அதில் இருந்து, 0.8 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்து விற்கிறது. இன்று வரை வெனிசுலாவிடம் இருந்து சீனாவும், அதற்கு அடுத்தபடியாக நம் நாடும் தான் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.


தற்போது இந்த எண்ணெய் வளம் அமெரிக்கா வசம் சென்றுள்ளது. மதுரோ கைது செய்யப்பட்ட உடனேயே, அந்நாட்டில் தேங்கி இருந்த 5 கோடி பேரல்கள் கச்சா எண்ணெயை ஏற்றி, தங்கள் நாட்டிற்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.


இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், அமெரிக்காவின் அடுத்த திட்டம் தான் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

அதாவது, வெனிசுலா கச்சா எண்ணெய்யை அதிகப்படியாக உற்பத்தி விற்பனைக்கு கொண்டு வருவது தான் அதிபர் டிரம்பின் முக்கிய திட்டம். இதற்காக வெனிசுலாவின் சட்டத்தையே திருத்தும் அளவுக்கு அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.


கவலை





வெனிசுலா கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா முதலீடு செய்தால், சுற்றுச்சூழலுக்கு தான் பெரும் ஆபத்து ஏற்படும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஏனெனில், வெனிசுலாவில் கொட்டிக் கிடக்கும் கச்சா எண்ணெய் வளம் அதிகப்படியான கசடுகள் நிறைந்தது. கார்பன் மற்றும் மீத்தேன் வாயுக்கள் அதிகளவில் இருப்பதால், சர்வதேச சந்தையில் வெனிசுலா கச்சா எண்ணெய் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது.


தற்போது அதிகளவில் வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்றால், பருவநிலை மாறுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கிடைப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு செலவுகளை குறைத்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என, இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


ஏற்கனவே பருவநிலை மாறுபாட்டுக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருக்கும் சூழலில், சுற்றுச்சூழல் மாசு பற்றி எல்லாம் அந்நாடு கவலைப்படுவதாக தெரியவில்லை. எண்ணெய் வளத்தை கைப்பற்றி, 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கைக்கு ஏற்ப தங்கள் நாட்டின் கஜானாவை நிரப்புவது தான் அதிபர் டிரம்பின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. இதனால், பாதிக்கப்படப் போவது வளரும் நாடுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement