தி.மு.க., அரசை அகற்ற சபதம் ஏற்போம்: பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேச்சு

6

கோவை: ''திருப்பரங்குன்றம் விவகாரம் நமக்கு சவாலாக உள்ளது; தி.மு.க., அரசை இந்த மண்ணை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசினார்.


கோவையில் பா.ஜ., மாநில தொழில்சார் பிரிவு சார்பில் நடந்த, 'புரபஷனல் கனெக்ட்-2026' மாநாட்டில் நிதின் நபின் பேசியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பிரதமர் மோடியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வாயிலாக, 'ஒரே நாடு உன்னத பாரதம்' என்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி., புரட்சியின் காரணமாக அத்தனை துறை வல்லுனர்களும் பயனடைந்துள்ளனர். அதை நேரடியாக தேசிய அளவிலும், தமிழக அளவிலும் காணமுடிகிறது.


நமக்கான வேலையை மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல், பிறருக்கு வேலை தரும் விதத்தில் இந்தியா மாற வேண்டும் என்பதுதான் மோடியின் கனவு. கடந்த, 2004 முதல் 2013 வரையிலான தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த, 2014 முதல் இதுவரை தமிழகத்தில், 6.5 லட்சம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு மோடி அரசு தந்துள்ளது.


மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சிறு குறு நடுத்தர தொழில்களில், 1.5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தி.மு.க., ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யத்தில் ஊறிக் கொண்டிருக்கிறது. அவர்களுடன் காங்., இணைந்துள்ளது.


லஞ்ச, லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே மத்திய அரசின் கனவு. அதனால், தி.மு.க., அரசு இந்த மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டும். இங்குள்ள அமைச்சர்கள், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் நமக்கு சவாலாக உள்ளது. தி.மு.க., அரசை அப்புறப்படுத்த அனைவரும் சபதம் எடுப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement