கஞ்சா பெண் வியாபாரியுடன் போட்டோ எடுத்திருக்கும் அமைச்சர்; அண்ணாமலை

9

சென்னை: பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவரது அறிக்கை:

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் மா. சுப்பிரமணியன், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

இந்த அழகில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது 'அ' வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறி உள்ளார். இந்த பதிவுடன், அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன், கஞ்சா பெண் வியாபாரி எடுத்துள்ள புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

Advertisement