சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும்; ரகுபதி

63


தமிழக இயற்கை வழங்கல் துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: 'திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என, சட்டத்திற்கு புறம்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தீபத்துாணில் ஏற்கனவே தீபம் ஏற்றப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் தீர்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என யாரும் கோரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் அந்த கோரிக்கை வந்தபோது அனுமதிக்க மறுத்து விட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதுவும் சொல்ல முடியாது; நீதித்துறையை களங்கப்படுத்த முடியாது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என யாரும் கேட்கவில்லை. யாரோ ஒருவர் கேட்டார் என்பதற்காக அனுமதி தருவது முழுக்க முழுக்க தவறு. இதுவரை இல்லாத வழக்கத்தை, பழக்கத்தை நீதிமன்ற தீர்ப்பு வாயிலாக நுழைப்பது உள்நோக்கம் கொண்டது. இது, தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது. கடந்த 100 ஆண்டுகளில், தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இல்லை. திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்துாண் அல்ல.



அது ஆங்கிலேயர்களின் காலத்தில் நடப்பட்ட 'சர்வே' கல். மலை உச்சி என்பதால் உயரமான கல்லாக நடப்பட்டுள்ளது. இல்லாத ஒன்றை, நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும்; ஏன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்? என்பதே எங்களின் கேள்வி. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்கவே, 144 தடை உத்தரவு போடப்பட்டது. அப்படி செய்திருக்காவிட்டால், அங்கு தீபம் ஏற்றியிருப்பர். அப்படி நடந்திருந்தால், தீபம் ஏற்றுவது வழக்கமாகி விடும். ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் அதுதான் நடக்க வேண்டும்.



கிராமத்தில் சுடுகாடு இருக்கும் இடத்தில்தான் பிணத்தை எரிப்பர். வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள். அதுபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதை அனுமதிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினர்.

@block_B@

முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!

மத்திய அமைச்சரும் பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க.,வினர், சனாதன தர்மத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது தற்செயல் நிகழ்வு அல்ல. விளக்கேற்ற அனுமதி அளித்த நீதிபதி சுவாமிநாதனை பதவியில் இருந்த நீக்கக்கோரி, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தனர்; இது, நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி. இச்சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சமூக மோதலை தவிர்க்கவே இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிக்கவில்லை என்ற தமிழக அரசின் கூற்று தவறானது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்த அச்சம் என்பது, மாநில அரசு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட கற்பனை. சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறவே, இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, பா.ஜ.,வும் தி.மு.க.,வும் ஒரே பக்கத்தில் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்தது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கோயல், “நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கிறோம் என்பது தான் விஜயின் புரிதல் என்றால், அவரை ஒரு தீவிர அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு முன், தமிழக மக்கள் இருமுறை சிந்திக்க வேண்டும்,” என்றார். block_B


@block_Y@

அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கண்டனம்

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் தீர்ப்பை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர் ரகுபதிக்கு அத்தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தீர்ப்பு குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தீர்ப்பை சட்டத்திற்கு புறம்பானது என்கிறார். நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை என்றால், மேல்முறையீடு செய்யுங்கள். அதை விடுத்து அதை சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறுவது ஒரு சட்டத்துறை அமைச்சருக்கு அழகா? மேலும் 'சுடுகாட்டில் தானே பிணத்தை எரிப்பர்' என ஒரு கொச்சையான வாதத்தை வைக்கிறார். எதை எதோடு ஒப்பீடு செய்கிறார்? திருப்பரங்குன்றம் என்பது எங்கள் உணர்வு சார்ந்தது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அமைச்சர் பேசுவது, தி.மு.க.,வின் சுயரூபத்தை காட்டுகிறது; இது கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு வேண்டிய தீர்ப்பை வழங்கவில்லை என்பதற்காக நீதிபதி மீது ஜாதி, மதச் சாயம் பூசி, 'இம்பீச்மென்ட்' வரை சென்று அற்ப அரசியலை செய்த தி.மு.க., தற்போது அதே தீர்ப்பை உறுதி செய்துள்ள நீதிபதிகளையும், அவ்வண்ணமே அச்சுறுத்த முயற்சிக்கிறதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.block_Y

@block_P@

அமைச்சர் ரகுபதிக்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு

ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது: அமைச்சர் ரகுபதி இது சட்டவிரோதமான தீர்ப்பு என கூறியுள்ளார். இந்த அமைச்சருக்கு என்ன மமதையோ! புத்தியுள்ள மனிதர் இப்படி பேசுவாரா? ஓட்டு வங்கி அரசியலுக்காக இவ்வளவு கேவலமாக பேசக்கூடாது. அரசியலுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கலாமா என, நீதிபதிகளே கேள்வி எழுப்பி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.block_P

Advertisement