மத சர்ச்சையாக மாறிய மாணவர் சேர்க்கை விவகாரம்; ஜம்முவில் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

3

ஸ்ரீநகர்: மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களுக்கு மட்டும் அதிக முக்கியவத்துவம் கொடுத்ததாக ஜம்முவில் செயல்பட்டு வரும் ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் ரியாசியில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லுாரியை, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் நடத்தி வருகிறது. முதல் முறையாக இந்த ஆண்டு முதல் இந்த கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இந்தக் கல்லுாரிக்கு 50 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், 42 இடங்கள், முஸ்லிம் மாணவர்களுக்கும், 7 இடங்கள் ஹிந்துக்களுக்கும், ஒரு இடம் சீக்கிய மாணவருக்கும் கிடைத்துள்ளது.

இந்த ஒதுக்கீடுகள் தான் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஹிந்து அமைப்புகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பான கோரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகம் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், மாணவர் சேர்க்கையில் உரிய விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த மாணவர்களை பிற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது.


Advertisement