வேன் டூவீலர் மீது மோதல் பிளஸ் 2 மாணவி பலி

தாராபுரம்: தாராபுரத்தில் டிராவல்ஸ் வேன், டூவீலர் மீது மோதிய விபத்தில், பிளஸ்2 மாணவி பரிதாபமாக இறந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், நல்லிகவுண்டன் வலசை சேர்ந் தவர் முருகன் மகள் கோபிகா, 18. இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல், பள்ளிக்கு செல்ல டூவீலரில் மாணவி சென்று கொண்டிருந்தார். தாசநாயக்கன்பட்டி பழநி - தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, ரோட்டை கடக்க முயன்றார்.

பழநியில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த டிராவல்ஸ் வேன், டூவீலர் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், மாணவி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

வேனை ஓட்டி வந்த சென்னிமலையை சேர்ந்த டிரைவர் குருசாமி, 36, பயணம் செய்த தாமரைகண்ணன், 38, சுகுமார், 43, அருண்குமார், 36, பழனிசாமி, 57 உட்பட, 12 பேர் காயமடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement