ஆன்மிக பெரியவர்கள் விரும்பும் ஆட்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

90

சென்னை: ''பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக தான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. ஆன்மிக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் புரட்சியின் பெயர்; எழுச்சியின் பெயர்; வீரத்தின் பெயர். பிரிட்டிஷ் படைக்கு எதிராகப் போராடிய வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் படையை திரட்டிய ஊர் திண்டுக்கல். வீரத்தின் விளை நிலமாக இம்மாவட்டம் விளங்குகிறது. மக்களின் முகங்களில் மகிழ்ச்சியை காண வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. நகரங்களுக்கு இணையாக கிராமங்களின் உள்கட்டமைப்பும் வளர வேண்டும் என்ற சமச்சீர் வளர்ச்சி தான் திராவிட மாடல் அரசின் இலக்கணமாகும்.

வளர்ச்சி




தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தேவைகளை கவனத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியை பெற்று வீறுநடை போடுகிறது.


இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில மக்களும் பாராட்டும் வகையில் சாதனை திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் லேப்டாப் வழங்கும் திட்டத்தின் நிலை என்ன? 2019ம் ஆண்டு பழனிசாமி லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தினார். ரூ.68 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 55 ஆயிரம் லேப்டாப்கள் பயன்பாடின்றி வீணடிக்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

மகிழ்ச்சி பொங்கல்



இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்க்கலாம். தமிழர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரூ.7,600 கோடி மதிப்பில் வேட்டி சேலை, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. வரும் பொங்கல் ஸ்டாலின் உங்ளுக்காக வழங்கும் மகிழ்ச்சி பொங்கல் ஆகும். அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்தார். செய்திகளை பார்த்து இருப்பீர்கள். பேசியது எல்லாம் பார்த்து இருப்பீங்க.



அவர் அமித்ஷா வா, அவதூறு ஷா என்று டவுட் வருகிறது. அந்த அளவுக்கு உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டு சென்று இருக்கிறார். தமிழகத்தில் ஹிந்து சமய நம்பிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் திமுக செயல்படுவதாக தவறாக பேசிவிட்டு சென்று இருக்கிறார். உண்மையான பக்தர்கள் நம்ம அரசை பாராட்டுகிறார்கள். நமது ஆட்சியில் ஹிந்து சமயத்திற்கு செய்த சாதனைகளை ஒரு நாள் முழுவதும் பேசுவதற்கு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக தான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.

ஹிந்துக்களின் உரிமை




ஆன்மிக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர்கள் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து அவர்களது மத உரிமையை காப்பாற்றும் ஆட்சியை தான் நடத்தி கொண்டு வருகிறோம். இப்படிப்பட்ட தமிழகத்தில் ஹிந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாத குற்றச்சாட்டை அமித்ஷா சொல்வது அவரது பதவிக்கு கண்ணியம் அல்ல. கலவரம், குழப்பம் செய்யும் அவர்களது எண்ணம் தமிழகத்தில் ஈடேறவில்லை. அது இனியும் நடக்காது. நான் இருக்கும் வரை நடக்கவும் விடமாட்டேன். வட மாநிலங்களைப்போல் வெறுப்பு பிரசாரம் செய்யலாமா என நினைக்கின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

8 அறிவிப்புகள்!



திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 8 அறிவிப்புகள் பின்வருமாறு:

* மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் செய்யப்படும்.

* ரூ.8 கோடியில் பாதாள சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படும்.

* இடும்பன் குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும்.

* ரூ.18.50 கோவியில் புதிய நத்தம் கலை கல்லூரியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

* மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.

* கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.

* ஓட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.

* ஏற்றுதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான, நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement