போதை பொருள் கடத்தலை தடுக்க பஸ், ரயில் நிலையங்களில் தனிப்படை

சென்னை: போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் வகையில், பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்களை கண்காணிக்க, எஸ்.ஐ.,க்கள் தலைமையில் இரண்டு போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒடிஷா, மணிப்பூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சென்னை வழியாக இலங்கைக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுகிறது.


கஞ்சா புழக்கம்



கோவா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, மெத் ஆம்பெட்டமைன், கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன.
குக்கிராமங்களில் கூட கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. எனினும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை, போலீசாரால் தடுக்க முடியவில்லை.

இதனால், கடந்தாண்டில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, தனியார் வாகனங்களை விட, மத் திய - மாநில அரசு பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தி, போதைப் பொருள் கடத்தல் அதிகம் நடந்திருப்பது, போலீசாருக்கு தெரியவந்தது.

அதன் அடிப்படையில் கண்காணிப்பு பணியை, போலீஸ் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பஸ், ரயில் மற்றும் விமானத்தை அதிகம் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துஉள்ளது.


தகவல் சேகரிப்பு



இதனால், பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்களை கண்காணிக்க, ஒரு எஸ்.ஐ., தலைமையில் இரண்டு போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவர்களின் முழு நேர பணியே, போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்காணிப்பதும், அது தொடர்பான தகவல்களை சேகரிப்பதும் தான்.

அவர்கள் வாயிலாக, தொடர் கண்காணிப்பு பணிகள் நடப்பதால், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் என, போலீசார் நம்புகின்றனர்.

Advertisement