டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பல்கலையின் ரூ.140 கோடி சொத்துகள் முடக்கம்

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையின் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அதன் வேந்தர் ஜாவத் அகமது சித்திக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்தாண்டு நவ., 10ல் டில்லி செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் இதில் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் டாக்டர் உமர் நபியின் கூட்டாளிகளான பெண் டாக்டர் ஷாஹின் சையீத், டாக்டர்கள் முசம்மில், ஆதிர் ராதோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

கைது செய்யப்பட்ட டாக்டர்கள், ஹரியானாவின் பரிதாபாதில் செயல்படும் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியதை அடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர்.

குற்றப்பத்திரிகை அப்போது, பல்கலையை நிர்வகிக்கும் அல் பலாஹ் அறக் கட்டளை, மாணவர்களிடம் சட்டவிரோதமாக நிதி வசூலித்தது தெரியவந்தது.

இதையடுத்து, நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. பல்கலை வேந்தர் ஜாவத் அகமது சித்திக் வீடு உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், 415 கோடி ரூபாய் முறைகேடாக பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாவத் அகமது கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதியில் பரிதாபாதின் தவுஜ் பகுதியில் அல் பலாஹ் பல்கலை கிளை நிறுவனங்களை கட்டியது தெரியவந்ததை அடுத்து, அது தொடர்பான கணக்கெடுப்பை அமலாக்கத் துறை மேற்கொண்டது.

இதன் முடிவில், அங்கு 54 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த பல்கலை கட்டடங்கள், பல்வேறு துறைகளுக்கு சொந்தமான கட்டடங்கள், விடுதிகள் ஆகியவை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டன.

இதன் மதிப்பு, 140 கோடி ரூபாய் என, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் பல்கலை வேந்தர் ஜாவத் அகமது சித்திக் மற்றும் அல் பலாஹ் அறக்கட்டளைக்கு எதிராக, பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையையும் அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

அதில், 'சட்டவிரோதமாக பெறப்பட்ட வருமானம் விற்கப்படாமல், வேறு பரிவர்த்தனைகள் செய்யப்படாமல் இருக்கவே, அல் பலாஹ் பல்கலை சொத்து முடக்கப்பட்டுள்ளது. நிதி மோசடியில் ஈடுபட்ட ஜாவத் அகமதுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்படாது இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், “சொத்துகள் முடக்கப்பட்டு, பல்கலை வேந்தர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்கலை சொத்துகள் முடக்கப்பட்டதால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

“அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அரசால் நியமிக்கப்படும் நபரிடம் பல்கலை நிர்வாகம் ஒப்படைக்கப்படும். இதனால், வழக்கு விசாரணை தொடர்ந்தாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது,” என, தெரிவித்தனர்.

Advertisement