அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'

14

அரசியல் ரீதியாக, அடுத்தடுத்து வரும் தடையால், த.வெ.க., தலைவர் விஜய் கடுமையான அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருப்பதாக, அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, மிகப் பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகிறோம் என, கடந்த ஓராண்டுக்கு முன், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க., மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.


அம்மாநாட்டைத் தொடர்ந்து, மதுரையில் நடந்த மாநாட்டிலும் தன் பலத்தை காட்டிய விஜய், 'தமிழக அரசியலில் தி.மு.க., எங்களுக்கு அரசியல் எதிரி; பா.ஜ., எங்கள் கொள்கை எதிரி' என்று சொல்லி, தன் அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்தார்.


'தமிழகத்தில் ஆளும் தி.மு.க.,வுக்கும், எங்களுக்கும் இடையே தான் போட்டி' என்று கூறி வரும் விஜய், தமிழகத்தின் இரண்டாவது பெரிய சக்தியாக த.வெ.க.,வை குறிப்பிடுகிறார்; தி.மு.க.,வை போலவே, மத்திய அரசின் மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

மீண்டும் ஆஜர்



தேர்தலை சந்திப்பதற்கு முன், அ.தி.மு.க.,வை மூன்றாம் இடத்துக்கு தள்ளியதுபோல பேசிக் கொண்டிருந்த விஜய் போக்கில், திடீர் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.



பொங்கலுக்குப் பிறகான விஜய் பிரசார பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்த நிலையில், கரூர் உயிர் பலி வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்காக, அவர் டில்லிக்கு அழைக்கப்பட்டார். நாள் முழுக்க டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டு, மணிக்கணக்கில் விசாரிக்கப்பட்டார்.


பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, அடுத்த நாள் விசாரணையை தவிர்த்த விஜய்க்கு, மீண்டும் ஜன., 19ல் ஆஜராக, சி.பி. ஐ., 'சம்மன்' அனுப்பி இருக்கிறது. தை பிறந்ததும் முழு வீச்சில் பிரசாரத்தில் இறங்கலாம் என முடிவெடுத்திருந்த விஜய், இப்போதும் கடும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்.


த.வெ.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அவரது திட்டமும் கிடப்பில் உள்ளது. அவரை நோக்கி, சிறு கட்சிகள் தவிர, வேறு கட்சிகள் எதுவும் வராததால், கூட்டணி அமைக்க முடியாமல் த.வெ.க., தடுமாறுகிறது.


இதற்கிடையில், விஜயின் கடைசி படமான, ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்படமும் சிக்கலை சந்தித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வரை சென்றும், சாதகமான தீர்ப்பை பெற முடியாத படக் குழுவினர், தற்போது சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


மன உளைச்சல்



த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: துவக்கத்தில் தி.மு.க., மட்டும் தான், த.வெ.க.,வுக்கு எதிர்ப்பாக இருந்து, ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக குடைச்சல் கொடுக்கும் என நினைத்து இருந்தார் விஜய்.


அதே போலவே, கரூர் உயிரிழப்பு சம்பவத்தை காரணமாக்கி, தொடர் கூட்டங்களை நடத்த விடாமல் தடை போட்டது , தி.மு.க., அரசு. அரசையும், தி.மு.க., வையும் விமர்சித்த த.வெ.க.,வினர் மீது, தொடர்ச்சியாக வழக்கு போட்டு, கட்சியினரை வேகமாக செயல்பட விடாமல் தடுத்தனர்.


அ.தி.மு.க.,வை துச்சமாக மதித்ததோடு, தி.மு.க., அரசுக்கு இணையாக, மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்ததால், விஜய் மீது, பா.ஜ., தேசிய தலைமை கோபம் கொண்டது. அவர் தனி அணி அமைத்து போட்டியிட்டால், அது தி.மு.க.,வுக்கு உதவியாக அமைந்து விடும் என பா.ஜ., கருதுகிறது.


தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு ஆசை காட்டி இழுக்க முயற்சிப்பதால், அதை வைத்து, தமிழக காங்கிரசார் பலம் பெற்று விடக் கூடாது எனவும் பா.ஜ., மேலிடம் எண்ணுகிறது.


விஜயை காட்டி, தி.மு.க., கூட்டணியில் காங்கிரசார் கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசுவதோடு, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்டு வருகின்றனர். இதனால், தமிழக காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறக் கூடும் என்பதால், ஜனநாயகன் படத்துக்கு, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் வாயிலாக தடை போடப்பட்டுள்ளது.


எதிர்பார்த்த கூட்டணி அமையாதது, தன் கடைசி படம், திட்டமிட்டபடி வெளிவராதது, திட்டமிட்டபடி பிரசார பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் என, அனைத்துக்கும் பா.ஜ.,வே பின்புலமாக உள்ளது. இதனால், விஜய் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார். தன் அரசியல் நிலைப்பாட்டை எப்படி வடிவமைப்பது என்பது புரியாமல் தவித்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -

Advertisement