ஐ.சி.சி., கோரிக்கை: வங்கம் மறுப்பு

1

தாகா: இந்தியாவில் விளையாடுவது குறித்த ஐ.சி.சி., கோரிக்கையை ஏற்க வங்கதேச அணி மறுத்துள்ளது.
வங்கதேசத்தில், இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால், பிரிமியர் தொடர் ஏலத்தில் ரூ. 9.20 கோடிக்கு வாங்கப்பட்ட வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுரை, பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி கோல்கட்டா அணி விடுவித்தது. இதையடுத்து, பிரிமியர் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வங்கதேசம் தடை விதித்தது.
தவிர, ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை (பிப். 7 - மார்ச் 8) தொடருக்காக, வங்கதேச அணி, இந்தியா வர மறுத்துள்ளது. இந்திய மண்ணில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் (பிப். 7, கோல்கட்டா), இத்தாலி (பிப். 9, கோல்கட்டா), இங்கிலாந்து (பிப். 14, கோல்கட்டா), நேபாளத்திற்கு (பிப். 17, மும்பை) எதிரான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐ.சி.சி.,க்கு வேண்டுகோள் விடுத்தது.
எனினும், இந்தியாவில், வங்கதேச அணியினருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என, ஐ.சி.சி., உறுதி தெரிவித்தது.
இதை ஏற்க, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்துள்ளது. இதுகுறித்து பி.சி.பி., தலைவர் அமினுல் கூறுகையில்,'' எங்களது பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதை ஐ.சி.சி.,யிடம் தெளிவாக தெரிவித்து விடுவோம்,'' என்றார்.

Advertisement