இரண்டாவது சுற்றில் சிந்து * மலேசிய பாட்மின்டனில்...
கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.
மலேசியாவில் சர்வதேச 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து 30, தைவானின் சவோ யன் சங்கை சந்தித்தார். முதல் செட்டை 21-13 என எளிதாக வென்ற சிந்து, அடுத்த செட்டை 22-20 என போராடி கைப்பற்றினார்.
முடிவில் சிந்து 21-13, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் மியாஜகியை சந்திக்க உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, தைவானின் லீ, யங் ஜோடியை 21-13, 21-15 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி 9-21, 23-21, 19-21 என இந்தோனேஷியாவின் மெய்லிசா, பேபிரியானா ஜோடியிடம் போராடி தோற்றது.
கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா, தனிஷ்டா கிராஸ்டோ ஜோடி, 15-21, 21-18, 15-21 என அமெரிக்காவின் ஸ்மித், ஜென்னி ஜோடியிடம் தோற்றது. ரோகன்-காடே, சூர்யா-பிரமுதேஷ் என மற்ற இந்திய ஜோடியும் முதல் சுற்றில் வீழ்ந்தன.