மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி; டில்லியில் கல் வீச்சால் பதற்றம்: சிறுவன் உட்பட 5 பேர் கைது

3

புதுடில்லி: டில்லியில் மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து குவிந்த கூட்டம் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், ஐந்து போலீசார் காயமடைந்த நிலையில், சிறுவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

டில்லியில் ராம்லீலா மைதானத்தை ஒட்டிய பைஸ் - இ - இலாஹி மசூதி மற்றும் துர்க்மான் கேட் பகுதியில் கல்லறை தோட்டம் அமைந்துள்ளது.

இதையொட்டி உள்ள பகுதிகளில், அரசு இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை டில்லி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இடிக்க முயன்றனர்.

மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் என 300க்கும் மேற்பட்டோர் இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் அங்கிருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கண்ணாடி பாட்டில்களும் வீசப்பட்டன.

இதில், போலீசார் ஐந்து பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதனால், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, அப்பகுதியில் பதற்றம் நிலவியது.



இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் நிதின் வல்சன் கூறியதாவது: பிரச்னையை தவிர்ப்பதற்காகவே, நள்ளிரவில் கட்டடங்களை இடிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டன. கல் எறிந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக, சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

முதற்கட்ட விசாரணையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, மசூதி இடிக்கப்படுவதாக வதந்தி பரவியதை அடுத்து, ஏராளமானோர் இப்பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது தெரியவந்துள்ளது.

அதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். வன்முறை எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


“சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட திருமண மண்டபம், மருந்தகம் மற்றும் அங்கிருந்த சில வணிக மையங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன. மசூதிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து, மிகுந்த கவனத்துடன் இடிக்கும் பணிகள் நடந்தன,” என, மாநகராட்சி துணை ஆணையர் விவேக் குமார் தெரிவித்தார்.



மசூதி இடிக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோக்களில் ஒன்று, காலித் மாலிக் என்ற நபரால் பதிவு செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மசூதி இடிக்கப்படுவதற்கு எதிராக வீதியில் திரண்டு போராடும்படி அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்தே, சம்பவ இடத்தில் ஏராளமானோர் கூடினர். எனவே, காலித் மாலிக்கை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement