'டெண்டர்' முறைகேடு வழக்கில் தாமதம் ஏன்: அரசு விளக்கம்
சென்னை: 'முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, 'டெண்டர்' முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக, வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டது அல்ல' என, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விசாரணை
அ.தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக, எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார்.
சென்னை, கோவை மாநகராட்சியில், சாலைப் பணிகள் மேற்கொள்ள, உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணைக்கு பின், வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர, மத்திய அரசு அனுமதி பெறுவதில் ஏற்பட்ட, காலதாமதத்துக்கான காரணத்தை விளக்கி, அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக பொதுத் துறை செயலர், விஜிலன்ஸ் கமிஷனர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், விஜிலன்ஸ் ஆணையர் மணிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அபய்குமார் சிங் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அவகாசம்
அதில், 'வழக்கு தொடர்பாக, 1.30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்ய, கால அவகாசம் தேவைப்பட்டது.
'ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர, மத்திய அரசிடம் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல.
'ஆவணங்களை மொழி பெயர்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் காரணமாகவே, இந்த தாமதம் ஏற்பட்டதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை, ஜன., 20ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
தண்டனையை நிறுத்தி வைப்பதுதான் நிரந்தரமான தீர்வு. ஆனால் அதிக செலவாகும்.. இதையெல்லாம் பார்த்திருந்தால் அந்த ராமாசாமி கூட தூக்கிட்டு தொங்க வாய்ப்பு இருந்திருக்கும்.