நிதி இலக்கை அடைவதற்கு அல்ல காப்பீடு ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே!

காப்பீடு செய்து கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலர் இதை உறுதியான வருமானம் தரும் சேமிப்பாக பார்க்கிறார்கள். சிலர் ஷேர் மார்கெட்டில் கிடைப்பது போன்ற லாபம் தரும் முதலீடாகப் பார்க்கிறார்கள், எதிர்காலத்துக்காக ஒரு சொத்தை உருவாக்கும் வழியாகவும் கருதுகிறார்கள். மேலும், வரி சேமிப்புக்காக காப்பீடு வாங்கும் அணுகுமுறையும் உள்ளது.


ஒரு விதத்தில் இவை அனைத்தும் காப்பீடு வாங்குவதற்கான காரணங்களே. ஆனால், இவை மிக முக்கியமான காரணங்களாக இருக்கக் கூடாது. ஏனெனில், காப்பீடு சிறப்பாகவும் தனித்துவமாகவும் செய்யக்கூடிய முக்கிய பணி, ஆபத்திலிருந்து பாதுகாப்பதே. மற்ற நிதி இலக்குகளை அடைய காப்பீடு சிறந்த வழி அல்ல.


அகால மரணம், தீ, விபத்து அல்லது திருட்டால் ஏற்படும் இழப்பு, மருத்துவமனையில் சேர்வதால் வரும் செலவுகள், அல்லது மிக நீண்ட காலம் வாழ்வதால் ஏற்படும் நிதித்தேவை ஆகியவற்றை சமாளிக்க கைகொடுப்பதே காப்பீட்டின் முதன்மை நோக்கம் ஆகும்.



நீங்கள் தேர்வு செய்யும் பாலிசி இந்த தேவையை சரியாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்த பிறகே, வரி சேமிப்பு அல்லது முதலீட்டு வருமானம் போன்ற 'கூடுதல்' அம்சங்களை பார்க்க வேண்டும். இரண்டு லட்டுக்கு ஆசைப்பட்டு, முக்கியமான இலக்கை கோட்டை விட வேண்டாம்.



வருமான வரி சட்டத்தின் கீழ் காப்பீட்டுக்கு இரண்டு வகையான வரி சலுகைகள் உள்ளன. ஒன்று, ஆயுள் காப்பீடு, ஆன்யூட்டி (அல்லது ஓய்வூதிய) பாலிசிகள் மற்றும் மருத்துவ காப்பீடு பாலிசிகளுக்காக செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வழங்கப்படும் கழிவு.


இவற்றின் வரம்புகள், பாலிசிதாரர் மற்றும் காப்பீடு செய்யப்பட்டவரின் வயது, விபரங்கள் மற்றும் வரி செலுத்துபவரின் விபரங்கள் போன்ற சில காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.


மற்றொரு வரி சலுகை வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10(10டி) கீழ் வழங்கப்படுகிறது. இதன்படி, ஆயுள் காப்பீடு அல்லது ஆன்யூட்டி பாலிசியின் மரண பலன் நாமினியாக நியமிக்கப்பட்ட நபரின் கைகளில் முழுமையாக வரிவிலக்கு பெறுகிறது.


சமீப காலமாக இந்த வரி கழிவுகளைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் முதலீடுகள் காப்பீட்டு பிரீமியம் மட்டுமல்ல; ப்ராவிடென்ட் பண்டு பங்களிப்பு போன்ற பிற முதலீடுகளும் இதில் அடங்கும்.


பழைய வருமான வரி முறை அனைத்து வரி சலுகைகளையும் வழங்குகிறது. புதிய வருமான வரி முறை வரி சலுகைகளை வழங்காது; ஆனால் வரி விகிதம் இதில் குறைவு.


ஆயுள் காப்பீடு அல்லது ஆன்யூட்டி பாலிசியின் மரண க்ளைம் தொகை நாமினிக்கு வழங்கப்படும் போது, இரண்டு முறைமைகளிலும் அது முழுமையாக வரிவிலக்காகும். பாலிசியின் முதிர்வு மதிப்பு மற்றும் யூலிப் பாலிசி க்ளைம்கள், சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இரண்டு முறைகளிலும் வரிவிலக்காக இருக்கும்.


இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ள நிதியாண்டிற்கான வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யும் போது, புதிய வருமான வரி முறைதான் டிபால்ட்டாக இருக்கும். விருப்பப்பட்டால் பழைய முறைமைதேர்ந்தெடுக்கலாம்.


எந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தாலும் காப்பீட்டு பாலிசியை அதன் உண்மையான நோக்கத்துக்காகவே வாங்குங்கள். கிடைக்கும் எந்த கூடுதல் நன்மையும் போனஸ்தான்!

Advertisement