கடத்தில் திருப்புகழை வாசிப்பதே என் இலக்கு!

இந்தியாவில், முதல் பெண் கடம் வாசிப்பாளரும், தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யரின் கொள்ளு பேத்தியுமான, பெங்களூரில் வசிக்கும், 68 வயதாகும் சுகன்யா ராமகோபால்:

மயிலாடுதுறையில் பிறந்தாலும், சென்னையில் கொள்ளு தாத்தா உ.வே.சா., வாழ்ந்த, 'தியாகராஜ விலாசம்' வீட்டில் தான் வளர்ந்தேன். சிறு வயது முதலே தாள வாத்தியங்கள் மேல் ஈர்ப்பு இருந்தது.

நாங்கள் குடியிருந்த அதே தெருவில் தான், பிரபல தாள வாத்தியக் கலைஞர் ஹரிஹர சர்மா, 'ஸ்ரீ ஜெய்கணேஷ் தாளவாத்திய வித்யாலயா' என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார்.

அந்த வீட்டை கடக்கும் போதெல்லாம் மிருதங்க சத்தத்தை சிறிது நேரம் ரசித்து விட்டு தான் செல்வேன். திடீரென ஒரு நாள் அந்த வகுப்பிற்குள் நுழைந்து, 'மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது' என்றேன். எந்த மறுப்பும் சொல்லாமல் கற்றுக் கொடுத்தனர்.

அப்படி கற்றுக் கொள்ள ஆரம்பித்து, சின்ன சின்ன கச்சேரிகளில் வாசிக்கும் அளவுக்கு உயர்ந்து, நாளடைவில் தமிழகம் முழுக்க மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு முறை கடம் வித்வான் விக்கு விநாயக் ராம் சாருடன் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அதில் மிருதங்கத்துக்கும், கடத்துக்கும் இடையிலான அந்த போட்டியை பார்த்ததும், கடம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை வந்த து.

அவரிடம் கேட்ட போது, 'பெண்கள் கடம் வாசிப்பது மிகவும் கஷ்டம். இது மண் வாத்தியம்; கையெல்லாம் புண்ணாகிவிடும்' என்றார்.

நானும் விடாமல், 'என்னிடம் கடம் கொடுத்து பாருங்க, என்னால் அதில் தாளம் எழுப்ப முடியலன்னா, விட்டுடறேன்' என்றேன். வேறு வழி இல்லாமல், அவர், தன் தந்தையான ஹரிஹர சர்மாவிடம் கூறவே, அவர், 'வாசிப்பது ஆணா, பெண்ணா என கடத்துக் கு தெரியாது.

'ஆர்வம் இருந்தால் நீ வாசி' என்று கூறி, கடம் வாசிக்க கற்றுக் கொடுத்து, அதன் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். அவர் கொடுத்த பயிற்சியாலும், ஊக்கத்தாலும் முழு நேரமும் கடம் வாசிக்க ஆரம்பித்தேன்.

அதன்பின் பெரிய ஜாம் பவான்களுக்கு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்கு நான் தான் கடம் வாசிப்பதாக முடிவாகி இருந்தது.

அதே நிகழ்ச்சியில், மிருதங்கம் வாசிக்க வேண்டிய ஆண் கலைஞர், என் பெயரை பார்த்ததும், 'பெண்கள் கூட நான் வாசிக்க மாட்டேன்' என, மறுத்து விட்டார். அது மிகவும் வருத்தமாக இருந்தது.

கவனம் பெறாத பெண் கலைஞர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, 'ஸ்த்ரீ தால் தரங்' என ஒரு குழுவை ஆரம்பித்து, பல நிகழ்ச்சிகள் செய்து வருகிறோம்.

அடுத்து, கடத்தில் காளிங்க நர்த்தன தில்லானாவையும், திருப்புகழையும் வாசிப்பதே என் இலக்கு!

Advertisement