பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா - இஸ்ரேல் போராடும் நெதன்யாகுவுடன் மோடி பேச்சு
புதுடில்லி: 'பயங்கரவாதத்திற்கு எதிராக, இந்தியா - இஸ்ரேல் உறுதியுடன் தொடர்ந்து போராடும்' என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பின் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, இரண்டு ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவின் தலையீட்டால், தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதி திட்டத்தை நடைமுறைப்படுத்த, இஸ்ரேல் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
இரு தலைவர்களும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், இரு நாட்டு மக்களுக்கும் அமைதி மற்றும் வளமாக வாழ வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அப்போது, காசா அமைதித் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பிரதமர் மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கினார்.
இதைத்தொடர்ந்து, அப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ, இந்தியா தன் நிலையான ஆதரவை அளிக்கும் என, பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
விவாதம் இதேபோல், எந்த வடிவிலான பயங்கரவாதத்தையும், சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையில் எதிர்த்து, இரு நாடுகளும் உறுதியுடன் தொடர்ந்து போராடும் என, இரு தலைவர்களும் உறுதிஅளித்தனர்.
வருங்காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன.
இதுதவிர, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது