மத்திய அரசு தரும் தரவுகளே பதில்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

20


சென்னை: திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு தரும் தரவுகளே பதில் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




சென்னையில் நடந்த தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இந்த மாநாடு முக்கியமானதாக அமையும். திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த பின் தான் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்படுகிறது. தொழில்நுட்பம் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.


தொழில்நுட்பத்தை வெறும் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமே பார்க்காமல் சமூக வளர்ச்சிக்காகவும் பார்க்க வேண்டும். புதுயுக தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னணியில் இருக்க வேண்டும். தொழில்நுட்பம் என்பது துணை செயல்பாடாக இல்லாமல், பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக மாறி இருக்கிறது.

மாற்றம்




உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப சூழல் இயல்பாகவே ஒருங்கிணைந்து இருப்பது தமிழகத்தின் சிறப்பு. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு நகரத்தில் மட்டும் சுருங்கிவிடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்து இருக்கிறோம். கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களும் தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர் ஆக உயர்ந்து இருக்கிறது.

மென்பொருள் ஏற்றுமதி




நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுமாறு ஒரு டேட்டாவை சொல்கிறேன். தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு தரும் தரவுகளே பதில். ஆற்றல் மிக்க மனித வளம் தான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement