போராடும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி

3

வாஷிங்டன்: தங்கள் உரிமைகளுக்காக போராடி வரும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.




மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோன்று வரலாறு காணாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சியான ரியாலின் மதிப்பும் சரிந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது.


ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், 45 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவது புத்திசாலித்தனமான விஷயமாகும். தங்கள் உரிமைகளுக்காக போராடி வரும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்.


அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் எவருக்கும் அமெரிக்கா ஆதரவாக இருக்கும். வெளிப்படையாக, ஈரான் ஆட்சிக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


ஈரான் பதிலடி




இதற்கு பதில் அளித்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் மக்கள் மீதான அக்கறையால் இத்தகைய நிலைப்பாடுகள் எடுக்கப்படவில்லை.


மாறாக ஈரானின் உள் விவகாரங்களில் தலையிட்டு, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டி அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா செயல்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement