ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு : விஜய்க்கு காங்கிரஸ் வலைவீச்சு

24

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படமான ‛ஜனநாயகன்' நாளை ரிலீஸாக இருந்தது. சென்சார் பிரச்னையால் படம் வெளியாகவில்லை. தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

விஜய் தற்போது அரசியல் களத்திலும் இறங்கி உள்ளதால் சினிமா சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு விஷயம் இருந்த ஜனநாயகன் படம் இப்போது அரசியல் விவகாரமாக உருவெடுத்துள்ளது. தணிக்கை வாரியம் மத்திய அரசின் கீழ் வருவதால் இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக விமர்சனங்கள் எழத் தொடங்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி நேரடியாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் விமர்சித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் ஜோடங்கர் வெளியிட்ட பதிவில், ‛‛விஜயின் ஜனநாயகன் படத்தை சுற்றி எழுந்துள்ள சர்ச்சையில் அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு படத்தை குறிவைப்பதை ஏற்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக படங்கள் தணிக்கை செய்யப்படுவதை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். கலை மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அரசியல் அழுத்தம் இல்லாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகள் மீது நீங்கள் தரும் அழுத்தத்தால் விஜயின் படம் பிரச்னைகளை சந்தித்துள்ளது. படைப்பு சுதந்திரத்தை மதிப்போம்.

விஜயை நடிகராக அல்லாமல் அரசியல்வாதியாக எதிர்கொள்ளுங்கள் மோடி ஜி. உங்கள் மிரட்டல் அரசியல் தமிழகத்தில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்'' என குறிப்பிட்டு, பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.

இவரை போலவே காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோரும் விஜயின் ஜனநாயகன் பட பிரச்னைக்கு அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து மத்திய அரசை விமர்சித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இப்போதே கூட்டணி கணக்குகள் தமிழக அரசியல் களத்தில் சூடு பிடிக்க துவங்கி உள்ளன. தற்போது வரை திமுக., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மற்றொருபுறம் விஜயின் தவெக., உடனான பேச்சையும் ரகசியமாக நடத்துகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன் வைத்து காங்கிரஸ் கட்சியும் பேசி வருவதால் விஜய் உடன் அவர்கள் கூட்டணி வைக்கலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. ஜனநாயகன் தொடர்பாக இதுவரை எந்த கட்சியினரும் பேசாத நிலையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து இருப்பது அவருடனான கூட்டணிக்காகவே என பார்க்கப்படுகிறது.

Advertisement