ஐநா விருது பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் காலமானார்

2


புனே: உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில்,83, காலமானார்.

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு பணிகளில் முக்கிய பங்காற்றி வந்த ஆய்வாளர்களில் ஒருவர் மாதவ் காட்கில்,83. 1942ம் ஆண்டு மஹாராஷ்டிராவின் புனேவில் பிறந்த இவர், புனே பல்கலையில் உயிரியல் பட்டம் பெற்றார். அதேபோல, மும்பை பல்கலையில் கணிதத்தில் ஆய்வாளர் பட்டமும் பெற்றுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக பொறுப்பு வகித்த மாதவ் காட்கில், சிறப்புமிக்க அறிக்கையை உருவாக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், கடந்த 2024ம் ஆண்டு சூழலியல் ஐநாவின் உலகின் மிக உயரிய விருதான 'சாம்பியன் ஆப் தி எர்த்' விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக மாதவ் காட்கில் நேற்று (ஜனவரி 8) புனேவில் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மாதவ் காட்கில் ஆற்றிய பங்களிப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.

Advertisement