66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகியது அமெரிக்கா!

28

நமது நிருபர்




66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 31 அமைப்புகள், ஐநாவின் துணை அமைப்புகள் ஆகும்.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் பல்வேறு தடாலடி முடிவுகளை செயல்படுத்தி வருகிறார். பிற நாடுகள் மீது சரமாரியாக வரி விதித்த அவர், உலகில் நடக்கும் போர்களை எல்லாம் தான் தடுத்து நிறுத்துவதாக கூறி, தம்பட்டம் அடித்து வருகிறார்.
அவரே ஈரான் அணு சக்தி நிலையங்கள் மீது தாக்குதலும் நடத்தினார்.

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்த டிரம்ப், அடுத்ததாக கிரீன்லாந்தை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில், 66 சர்வதே அமைப்புகளில் இருந்து விலகுவதாக அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். இதில் 31 அமைப்புகள், ஐநாவின் துணை அமைப்புகள் ஆகும்.

அமெரிக்காவின் நலனுக்கு இந்த அமைப்புகள் எதிராக செயல்படுவதால் விலகுவதாக டிரம்ப் கூறி இருக்கிறார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த அமைப்புகள் எங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. எனவே தான் இந்த அமைப்புகளில் இருந்து விலகி இருக்கிறோம். அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் வேறு வழிகளில் சிறப்பாக செலவிடப்படும்'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா விலகி உள்ள 31 ஐநா துணை அமைப்பின் பட்டியல் பின்வருமாறு:

* பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை


* ஐநா பொருளாதார மற்றும் சமூக மன்றம்

* லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான பொருளாதார ஆணையம்;

* ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம்;

* மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார & சமூக ஆணையம்


* சர்வதேச சட்ட ஆணையம்

* சர்வதேச வர்த்தக மையம்

* ஆப்பிரிக்காவுக்கான சிறப்பு ஆலோசகர் அலுவலகம்

* குழந்தைகளுக்கான ஐநா பொதுச்செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி அலுவலகம்


* அமைதி கட்டமைப்பு ஆணையம்

* அமைதி கட்டமைப்பு நிதி அமைப்பு

* ஆப்ரிக்க வம்சாவளி மக்கள் நிரந்தர மன்றம்

* ஐநா நாகரிகங்களின் கூட்டணி

* வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா. மாநாடு;

* ஐநா ஜனநாயகம் நிதி அமைப்பு

* ஐநா எரிசக்தி அமைப்பு

* பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரமளித்தலுக்கான ஐநா அமைப்பு

* காலநிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாடு

* ஐநா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

* ஐநா மக்கள்தொகை நிதி அமைப்பு

* ஆயுதங்களுக்கான ஐநா பதிவேடு

* ஐநா அமைப்பு தலைமை நிர்வாகிகளின் வாரியம்

* ஐநா அமைப்பு பணியாளர் கல்லூரி அமைப்பு

* ஐநா பல்கலைக்கழகம்

* ஐநாவின் நீர்வள மேலாண்மை அமைப்பு

* ஐநா கடல் வள மேலாண்மை அமைப்பு

* போரின் போது பாலியல் வன்கொடுமையை தடுப்பு பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி அமைப்பு

* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி அமைப்பு

* ஐநாவுக்கான குற்றவியல் தீர்ப்பாயம்

* வளரும் நாடுகளில் வனம் சீரழிவை தடுக்கும் திட்டம்


* ஐநா குடியேற்ற திட்டம்

ஐநா கலை, கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்தும், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்தும் விலகுவதாக ஏற்கனவே டிரம்ப் அரசு அறிவித்துவிட்டது. மேலும், ஐநா மனித உரிமை கவுன்சில் மற்றும் பாரிஸ் கால நிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து வெளியேறுவதாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement