75 சதவீத சொத்துக்கள் மக்களுக்கே அர்ப்பணிப்பு: மகனை இழந்த 'வேதாந்தா' நிறுவனர் அறிவிப்பு

40

மும்பை: 'வேதாந்தா' குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால், மகன் அக்னிவேஷ் மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, தான் சம்பாதித்த சொத்துகளில் 75 சதவீதத்துக்கு மேலான சொத்துக்கள் மக்களுக்கான நலப்பணிகளுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுதும் கனிமம் மற்றும் சுரங்கம் தொடர்பான தொழிலில், 'வேதாந்தா' குழுமம் ஈடுபட்டு உள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த குழுமம், தமிழகத்தின் துாத்துக்குடியில் செயல்பட்ட, 'ஸ்டெர்லைட்' ஆலையையும் நிர்வகித்து வந்தது.

இந்த நிறுவனத்தின் தலைவராக அனில் அகர்வால் உள்ளார். இவரின் மூத்த மகன் அக்னிவேஷ், 49, 'வேதாந்தா' குழுமத்தில் உள்ள, 'தல்வண்டி சபோ பவர் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

அமெரிக்காவில், சமீபத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட அக்னிவேஷ், விபத்தில் சிக்கினார். இவருக்கு நியூயார்க்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக உடல்நலம் தேறி வந்த அக்னிவேஷ், திடீர் மாரடைப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது, அனில் அகர்வாலின் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தன் மகனின் மரணம் குறித்து, சமூக வலைதளத்தில் அனில் அகர்வால் கூறியுள்ளதாவது:

இது, என் வாழ்வின் இருண்ட நாள். என் அன்பு மகன் அக்னிவேஷ், எங்களை விட்டு விரைவாக பிரிந்து விட்டார். தன் பிள்ளைக்கு விடை கொடுக்க வேண்டிய பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்த இழப்பு, என்னையும், என் மனைவி மற்றும் குடும்பத்தாரை மிகவும் நொறுக்கிவிட்டது.

எங்கள் வருமானத்தில், 75 சதவீதத்தை இந்த சமூகத்துக்கு திருப்பித் தருவதாக என் மகனிடம் உறுதி அளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்று உறுதி எடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமூகப் பணிக்காக, தன் வருமானத்தில் 75 சதவீதத்துக்கு அதிகமாக செலவிடப்போவதாக அறிவித்துள்ள அனில் அகர்வாலின், 'வேதாந்தா' குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு, 2.43 லட்சம் கோடி ரூபாய்.

Advertisement