அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

7

நமது டில்லி நிருபர்

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இபிஎஸ் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.


இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்
இபிஎஸ்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மனுதாரர் சூரிய மூர்த்தி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார். மனுவில், "அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, அதனை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த மனுவை இன்று (ஜனவரி 09) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு விசாரித்தது. வழக்கை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement