வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதலுக்கு திட்டம்; முடிவை திரும்பப் பெற்றார் அதிபர் டிரம்ப்

6

வாஷிங்டன்: வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த முடிவை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும், கடந்த 3ம் தேதி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு முன், தலைநகர் கராகசின், ஏழு இடங்களில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது அந்த முடிவை அவர் திரும்ப பெற்று இருக்கிறார்.


இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வெனிசுலா அமைதியை நாடுகிறது.
இதன் அடையாளமாக ஏராளமான அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறது. இது மிகவும் முக்கியமான மற்றும் புத்திசாலித்தனமான செயலாகும்.


அமெரிக்காவும் வெனிசுலாவும் இணைந்து சிறப்பாகச் செயல்படுகின்றன. குறிப்பாக அவற்றின் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வெனிசுலாவில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த முடிவை ரத்து செய்கிறேன்.

தற்போது அங்கு தாக்குதல் நடத்த தேவையில்லை என்று தெரிகிறது, இருப்பினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கப்பல்களும் தற்போது இருக்கும் இடத்திலேயே நிறுத்தப்படும். விரைவில் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட இருக்கிறது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement