வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

8

புதுடில்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004 - 09 வரை, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது.


இது தொடர்பாக வழக்கு டில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட 11 பேர் மீது, கடந்த அக்., 13ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றமும் ஏற்றது.
இந்த வழக்கில், விசாரணைக்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.


இந்நிலையில் இன்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீதான அடுத்த விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிபதி விஷால் கோக்னே ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் லாலுவின் குடும்பத்தினர் மீதான இந்த ஊழல் வழக்கு விசாரணை தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement